பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வனதேவியின் மைந்தர்கள்


கண்ணிர் பெருகுகிறது. அவளால் விம்மலை அடக்க முடியவில்லை.

“மன்னர் வரவில்லை தாயே, நான். நான் இனி இங்குதான் இருப்பேன். எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத துன்பம், குலம் கோத்திரம் அறியாத இந்த அபலைக்கு நேரிட்டிருக்கிறது. ஆனால், அம்மா, இதுவே இனி என் இடம் என் குழந்தைக்கும் இதுவே வாழ்விடம்.”

பெரியம்மை பதறிப் போகிறாள். என்றாலும் சுதாகரித்துக் கொள்கிறாள்.

“என் கண்ணம்மா, என் வாழ்நாள் ஏன் நீண்டு போகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் நான் மிகப்பெரிய ஒரு காரணத்துக்காக உயிர் வாழ்ந்திருக்கிறேன். குழந்தாய், இந்த இடம், உன்னை அன்பு மயமாக அனைத்துக் கொள்ளும்.” என்று மடியில் அவளைச் சாத்திக் கொள்கிறாள். அன்னை மடி. அன்னை மடி.

“என்னை நாடுகடத்தினர்; ஆனால் நான் பெறற்கரிய பேறு பெற்றுவிட்டேன். மாளிகைச் சிறையில் இருந்து, இந்த இதமான இடத்துக்குக் கொண்டு சேர்த்த உமக்கு நன்றி.” என்று மனசோடு கூறிக் கொள்கிறாள்.

சலசலவென்று நீரோடும் ஒசையில் செவிகள் நனைவது போன்ற உணர்வில் திளைக்கிறாள். உடல் முழுதும் ஏற்படும் சிலிர்ப்பில், கனத்த போர்வையை மேலே போர்த்து விடுவது போன்ற இதம். இது உறக்கமா, விழிப்பு நிலையா? அவள் கர்ப்பத்துச் சிசுவாகிவிட்டாளா? உண்மையா? உண்மைதானா? ஒருகால் அவள் ஒர் உயிரை வெளியாக்கி ஜனனியாகி விட்டாளா?

அவள் விருட்டென்று எழுந்திருக்கிறாள்.

“தாயே, இந்த விளைநிலம் எந்தக் குலத்துக்கு உரியது?” அவளையறியாமல் அவள் கை மணி வயிற்றில் படிகிறது.

“கண்ணம்மா, விளை நிலங்களுக்குக் குலமேது? அது உயிர்களைப் பிறப்பித்து, வித்துக்கு வீரியம் அளிக்கிறது.