பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

253

குனிந்து அந்த அம்மையின் தோள்களைப் பற்றித் தழுவுகிறாள்.


27

போரின் சுவடுகள் இக்கரையில் பதியவில்லை. வேதபுரி மன்னர் வந்து சென்ற பிறகு, ஒரளவுக்கு அமைதியாக இருப்ப தாகவே பூமகளுக்குத் தோன்றுகிறது. என்றாலும், இதை அமைதிக்கான நிறைவு என்று கொள்வதைவிட, ஒரு புயலுக்கு முந்தைய கட்டமோ என்றும் தோன்றுகிறது.

கேகய மாதாவின் அனல்பொறிச் சிரிப்பில் உதிர்ந்த எது வேள்வி! எது வேள்வி! என்ற வினா பூமகளுக்கு இரவிலும் பகலிலும், நீரெடுக்கும்போதும், பிள்ளைகள் கொண்டு வரும் கனிகளையும் கிழங்குகளையும் பக்குவம் செய்யும் போதும், தானியங்களை மாவாக்கும்போதும் ஒலிக்கின்றன. திடீரென்று அரண்மனையில் பணிபுரிந்த பிஞ்சுச் சிறுவர் சிறுமிகளை நினைக்கிறாள். கல்திரிகையைக் கட்டி இழுக்கும் தளிர்விரல்களைப் பார்ப்பது போல் தோன்றும். வேள்வி. குஞ்சும் பிஞ்சும் தம் உழைப்பை எந்த வேள்விக்கு நல்குகின்றன.

இவள் தானியம் குற்றும்போது, வேடுவர் குடியில் இருந்து பூரு வருகிறது. கொழுவிய கன்னங்கள், ஆறே வேனில் பருவங்கள் தாண்டாத சிறுமி. இடையில் வெறும் இலை மறைவுதான். வேனில் பருவமாயிற்றே? கூந்தல் கற்றை கற்றையாக விழுகிறது. மாநிற மேனி. சிரிப்பு..முன்பற்கள் விழுந்து முளைக்கும் கோலம். ஈறுகள் கறுத்து, வெள்ளையாகப் பற்கள். இது விடுதலைச் சிரிப்பு: கொத்தாக மீன் கொண்டு வந்து அவந்திகாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சிரிக்கிறது.

இந்தச் சிரிப்பு மொழிக்குத் தேவையில்லாத அடையாளம் இவர்கள் பேசும் திருத்தமில்லாத மொழி முதலிலெல்லாம் பூமகளுக்குப் புரியாது. ஆனால் அவள் மைந்தர்கள் அதே மொழியில்தான் வளர்ந்தார்கள். சத்திய முனிவரின் பயிற்சியில் பல்வேறு மொழிகளை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.