60
வனதேவியின் மைந்தர்கள்
இப்போது அன்னை. அன்னை சொல்லித்தான் இங்கு என் ஆவலைத் தீர்த்து வைக்க வந்திருக்கிறீர்?
“என் மீது கோபமா, தேவி?” மன்னர் தணிந்து அவள் முகவாயைத் தன் பக்கம் திருப்புகையில் எங்கிருந்தோ அவள் வளர்த்த தத்தம்மா அவள் தோளில் வந்து குந்துகிறது.
“மகாராணி! மகாராஜா! மகாராணிக்கு மங்களம்!”
அவள் அதைக் கையிலேந்தி இருக்கையில் “மகாராணி மகாராசாவிடம் கோபிக்கக் கூடாது மன்னர் ... பாவம்” என்று குறும்பு செய்கிறது.
அப்போது, ஜலஜை கனிகளையும், உண்ணும் பண்டங்களையும் அவர்கள் அருகில் கொண்டு வைக்கிறாள். தாம்பூலத் தட்டும் வருகிறது.
“ஜலஜா... ஜலஜா... பூனைக்கண்ணு...” என்று கிளி பேசுகிறது. ‘சீ’ என்று அவள் விரட்டுகிறாள்.
மன்னர் அவளை அப்பால் போகும்படி சைகை காட்டுகிறார். அவள் செல்லுமுன் கிளியும் பறந்து செல்கிறது.
“இது பொல்லாத கிளி.”
“ஏன்?”
“நம் இருவருக்கிடையில் குறுக்கிடுகிறதே?”
“புத்திசாலிக்கிளி. ஒருநாள் என் முற்றத்தில் இது அடிபட்டு விழுந்தது. பாலும் பழமும் ஊட்டி வளர்த்து பேசப் பயிற்று வித்தேன். இது இப்போது சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையாக இல்லாமல் ஏதேதோ சொல்கிறது. எங்கெங்கோ கேட்டவற்றையெல்லாம் கோவையாக அடுக்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறது...”
“சொல்லப் போனால் எல்லா உயிர்களுக்கும் அவை அவைக்குரிய மொழிகள் உண்டு. இளைய மாதாவின் தகப்பனாருக்கு அத்துணை மொழிகளும் தெரியுமாம். ஆனாலும்