இரண்டாம் பதிப்பின்
முன்னுரை
இந்நூல் எழுதி முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. இதில்வரும் கட்டுரைகளுள் சில அதற்கு முன்பே இதழ்களில் வெளிவந்தவை. இந்நூலைப் பயின்ற பலரும்; (வங்கநாட்டு நன்னெற்முருகன்-சுனித்குமார் சாட்டாஜி உட்பட, நான் கூறியவை அனைத்தும் ஏற்புடையன என்றனர். “இராமனும் இராவணனும்” என்ற கட்டுரையினைக் காலந்சென்ற பெரியார் அவர்களுக்குப் படித்துக் காண்பித்த காலத்தில், அவர் 'எழுது; நீ உன் கருத்தை எழுதிக் கொண்டே இரு' என்று தான் சொன்னார்கள். தமிழ்நாட்டுப் பிறவரலாற்று அறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்லலாம். இதற்கு மாறுபட்ட கருத்தோமறுத்த எழுத்தோ இதுவரை வரவில்லை. எனினும் இன்னும் இந்தவகையில் ஆழ்ந்த ஆய்வு காணவேண்டுமென வரலாற்று அறிஞர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இந்த நூலில் காட்டிய பல மேற்கொள்கள் பலப்பல ஆங்கில-தமிழ் நூல்களிலிருந்து எடுக்கப்பெற்றன. அந்த நூல்கள் பலவும்-ஏன்-அனைத்தும் இன்று நாட்டில் உலவவில்லை. புதிதாக அச்சிடப் பெறவில்லை. தமிழ் நலம் காணும்-திராவிட இனப்பெருமை பேசும் இன்றைய தமிழ்நாட்டு அரசு இவற்றுள் சிலவற்றையாயினும் விரைந்து அச்சிட்டு உதவின் நலம் விளையும். சென்னைப் பல்கலைக் கழகம் தன் வெளியிடுகளை (Foreign notices of South India போன்றன) மறுபடி வெளிக் கொணரலாம், உண்மை வரலாற்றினை மேலும் தெளிவாக வெளியிட அவை உதவும்.
இந்நூல் முப்பது ஆண்டுகள் கழித்துவரினும் கருத்துகள் அனைத்தும் இன்றும் முற்றும் ஏற்புடையனவே. இந்தப் பதிப்பினை அச்சிடும்போது ஒப்புநோக்கி உதவிய பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் சா. வளவன் அவர்களுக்கு நன்றி உடையேன். பயன்கருதி, நாட்டின் உண்மை வரலாறு தெரிய, என்னை மறுபடியும் இந்நூலை வெளிக்கொணர வேண்டும் எனத் தூண்டிய என் மாணவர்களுக்கும் பிறருக்கும் நன்றியும் வாழ்த்தும்.
தமிழ்க்கலை இல்லம், பணிவார்ந்த,
சென்னை-30, அ. மு. பரமசிவானந்தம்
30-5-90