பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வர்ணாஸ்ரமம்


அசுரரை ஏய்த்த சூது, ஆண்டவன் லீலையாகப்போற்றப் படும் இந்தநாட்டிலே, வேறுபலர், மோகினிருபம் வீரரை வீழ்த்தும் வேல் என்று கொண்டதிலே

ஆச்சரியப்படுவதற்கில்லை. "சர்வ வல்லமையுள்ளவரே, சாகசத்தைச் சக்கரமாகக்கொண்டே அசுரரை சம்ஹரித்தார் என்றால், சாதாரணமக்கள், அம்முறையைக் கையாளாமல் இருப்பரோ! இங்ஙனம், ஒருவரை ஒருவர் வீழ்த்தப் பல்வேறுவகையும், பல்வேறு கருவியும் இருத்தல் போலவே, ஒரு இனத்தை மற்றோர் இனம் அடக்கக் கையாளும் முறையும் பலவகைப்படும். தீப்பந்தமும் திடீர்த் தாக்குதலும் ஒரு முறையாக அமைந்திருக்கிறது! படையில் கலகமூட்டுவதும் பாசறை கெடுத்தலும், சிலசமயம் கையாளப்பட்டன. அடுத்துக் கெடுப்பதும், அணைத்து அழைப்பதும் சில சமயம் நடந்ததுண்டு. உலகிலே இதுபோல, இனப்போரின்போது, ஒவ்வோர் விதமான முறையைக் கையாண்டிருக்கிறார்கள். ஆரிய இனம் எப்படை கொண்டும் திராவிடரை வீழ்த்தவில்லை ; அப்புற்படையினருக்குப் போரிடும் ஆற்றலே இருந்ததில்லை. திராவிட இனம், ஆரிய தாசராக மாறிட ஆரியர் கையாண்ட முறை, கலையருவியிலே திராவிடரைத்தள்ளியதுதான்! எமது கலையழகைக் காணீர், என்றுகூறித் திராவிட இனத்தை மயக்கி, வீரரைக் கோழைகளாக்கி வீழ்த்தினர். அன்று வீழ்த்தியது மட்டுமல்ல, இன்றும், இனி என்றுங்கூட அந்தக் கலை எனும் அங்குசத்தால் திராவிடமெனும் மதகரியை அடக்கலாம், என்ற மனப்பான்மையுடனேயே ஆரிய இனம் இருக்கிறது. அதிலே ஓரளவு உண்மையும் இருக்கிறது.