பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வல்லிக்கண்ணன் கதைகள்


பட்டர், கர்ப்பூர வில்லைகள் வரிசையாய், அடுக்கடுக்காய், கொளுத்தப் பெற்ற அடுக்குச் 'சூடத் தட்டை' கைகளில் பற்றி, தனி லயத்துடன் மேலும் கீழுமாக லேசாக அசைத்து அசைத்து ஆட்டி, 'நடன தீபாராதனை' பண்ணி நின்றார். அதற்கேற்ற முறையில் நாதசுரம் தனித் தன்மையோடு இசைஒலி எழுப்பியது. மணிகள் ஒலித்தன. 'அம்மா தாயே, அகிலாண்டநாயகி’ என்று பக்தர்கள் பரவசத்துடன் முன்கிக் கரங்கூப்பி நின்றனர்.

ஒளியில் குளிக்கும் மங்களப் பேரொளியாய் காட்சிதந்த அம்பாளின் திரு உருவும், மோகனப் புன்னகையும் ராமலிங்கத்தை என்னவோ செய்தன. அந்தத் திருமுகத்தையே கவனித்து நின்ற அவருக்கு அம்பாள் தன்னைப் பார்த்துப் பரிகாசமாய் சிரிப்பது போல் இருந்தது.

'சுடுற கஞ்சியை காலில் கொட்டிக் கொண்டது போல் தவித்தாயே - நேரமாச்சு, நேரமாச்சு; சீக்கிரம் போகனும் என்று, ரொம்பவும் பரபரப்பு காட்டினாயே! இப்போ பறக்கலியா?' என்று கேட்பதாகத் தோன்றியது.

அவர் பார்வை இயல்பாகக் கைப் பக்கம் பாய்ந்தது. மணி என்ன என்று பார்ப்பதற்காக. கையில் கடியாரம் இல்லை. நெஞ்சு திக்கென்றது ஒருகணம். உடனேயே, 'கோயிலுக்குத் தானே. வாட்ச் வேண்டாம்' என்று அதை கையில் கட்டிக் கொள்ளாமலே வந்து விட்டது நினைவில் உறைத்தது.

கிலாண்டநாயகியின் சிரிப்பு அழுத்தம் பெற்றதாக அவருக்குப் பட்டது.

'அம்மா, தாயே, அகிலாண்ட நாயகி. என்னை மன்னித்து விடு' என்று உருக்கமாக வேண்டிக் கொண்டு, அன்னையை உள்ளத்தில் நினைந்து, கண்மூடிக் கரம் குவித்து வணங்கி நின்றார் ராமலிங்கம்.

அவர் அவசரமாகப் பயணம் புறப்பட்டுக் கொண்டு தான் இருந்தார். சிவபுரத்திலிருந்து பஸ் பிடித்து, ஐந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஜங்ஷனுக்குப் போய், எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் போகவேண்டும். முக்கிய அலுவல் ஒன்று அவருக்காகக் காத்திருந்தது.

'இந்த ஊர் பஸ்ஸை நம்பமுடியாது. எப்ப வரும், எப்போ போய்ச் சேரும் என்று கணக்கே கிடையாது. டிரைவர் கண்டக்டர் இஷ்டத்துக்கு வரும், போகும், மணிக் கணக்கில் வராமலே ஒழிஞ்சு போனாலும் போகும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்று பேரு. ஒன்றரை மணி நேரம், ரெண்டு மணி நேரத்துக்கு