பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 159

"ஆமாம். அண்ணாச்சிக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து விட்டது. நகரத்தில் சுகமாக வசிக்க முடியும். உங்கள் மகள் செளக்கியமாக வாழட்டும்" என்று கூறிவிட்டுத் திரும்பி நடக்கலானான் சந்திரன்.

"சந்திரா சந்திரா!... எங்கே போகிறே?" என்று கத்தினார் மாமா.

"இனி அது என் கவலை. எனது வாழ்க்கை என்றுமே என்னுடைய பிரச்னை" என்று கூறியபடியே நகர்ந்தான் அவன்.

"சாப்பிடாமல் போகிறாயே, சந்திரா! உனக்காக விசேஷமாகச் சாப்பாடு தயாரித்து..." என்று அத்தை பேச்செடுத்தாள்.

“என் பசி எல்லாம் போயே போய் விட்டது” என்று கூறிய சந்திரன் வாசல் நடையை அடைந்தான். அவன் வீட்டினுள் திரும்பிப் பார்க்கவும் விரும்பினானில்லை. ஆயினும் அவன் செவிகளைத் தாக்கத் தவற வில்லை ஒரு ஒசை.

கைதவறிக் கீழே விழுந்து உடைந்த கண்ணாடி எழுப்பிய 'சிலீர்' ஓசை அது.

நெடிய பெருமூச்சு ஒன்றை உந்தியபடி தெருவில் இறங்கி வேகமாக நடந்தான் சந்திரன். அப்பொழுது வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. எனினும் எங்கும் இருண்டு கிடந்ததாகவே தோன்றியது அவனுக்கு.


வேலைக்காரி


'நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்' என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.

'ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?’ என்று கேட்டார் பிள்ளை.

'அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!’ என்று சொல்லி, சிவராமன் பொருள் பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.

‘என்ன விஷயமய்யா? இப்ப அவ உங்க வீட்டிலே இல்லையா? அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவா சூரியன் பிள்ளையைத் துண்டியது.