பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 வல்லிக்கண்ணன் கதைகள்

சூரியன் பிள்ளையின் ஆர்வம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. சிவராமன் சாருக்கு எப்போது வசதிப்படும்; எந்த நேரத்தில் எந்த இடத்தில் அவரை சந்தித்தால், சாவகாசமாகப் பேச முடியும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி: அவ்விதமே அவரைக் கண்டு உரையாடப் பிள்ளை தவற வில்லை.

பூசி மெழுகாமல் சிவராமனும் விஷயத்தை உள்ளபடி சொல்லித் தீர்த்தார்.

பஞ்சவர்ணத்தம்மாளுக்கு, அதிகமாய் போனால், முப்பத்தஞ்சு வயசு இருக்கலாம். வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை அவளுள் கனன்று கொண்டிருந்தது. ஆனால் வாழ்க்கை அவளை வஞ்சித்து விட்டது. கல்யாணமாகியும் என்ன காரணத்தினாலோ கணவன் அவளை விலக்கி வைத்து விட்டான். சாப்பாட்டுக்கே திண்டாடுகிற குடும்ப நிலைமை. எப்படி எப்படியோ காலம் தள்ளவேண்டியிருந்தது. கஷ்ட ஜீவனம்தான். பெரியப்பா மகனான அண்ணாச்சி ஒருவர் அவள் மீது இரக்கப்பட்டு, தம்மாலான உதவிகள் செய்து வந்தார். அவர்தான் சூரியன் பிள்ளையிடமும் உதவி கோரி, அவளுக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார்.

சிவராமன் வீட்டுக்கு வந்த பிறகு அவளுக்கு மூன்று வேளையும் வயிறாறச் சாப்பாடு கிடைத்தது. சாயங்காலம் காப்பி, சில வேளைகளில் ஏதேனும் சிற்றுண்டியும் கிடைத்தது. அதனால் அவளுள் ஒரு தெம்பும், உடலில் ஒரு தெளிவும் சேர்ந்தன. வயிற்றுப் பசிக்கு நிச்சயமான தீர்வு கிட்டியவுடன், அவளிடம் உறங்கிக் கிடந்த இதர பசிகள் விழித்துக் கிளர்வுற்றன போலும்.

தனது புறத் தோற்றத்தில் அவ்வளவாக அக்கறை காட்டாதிருந்த பஞ்சவர்ணத்தம்மாள் இப்போது சிரத்தை கொள்ளலானாள். நன்றாகச் சீவி முடித்து, முகத்துக்குப் பவுடர் பூசிக் கொள்வதில் ஆர்வம் காட்டியதோடு, தன்னை ஆண்கள் பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் கொண்டாள். அதனால் வேலை இல்லாமலே தெருவில் அங்குமிங்கும் போனாள். வாசல் படியில் நின்று தன்னையே காட்சிப் படுத்தினாள். போகிற வருகிற ஆண்களைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் கண்டாள்.

பார்ப்பதோடு மட்டும் திருப்தி கண்டு விடாத மனம் ஆண்களோடு பேசிக்களிக்கத் துண்டியது. சமையல்காரியான அவள் யாரோடு பேச முடியும்? பால்காரன், காய்கறி விற்பவன், ஐஸ் வாலா, ரோடோரத்தில் தள்ளு வண்டியில் குளிர் பானங்கள் விற்கிறவன் - இப்படிப்பட்டவர்களிடம் அவளுக்கு ஒரு