பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

இவ்வளவு திருப்தியினூடும் கைலாசத்துக்கு உள்ளுர ஒரு வருத்தம். 'எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. இந்த விநாயகம் பயல் வரவே இல்லை பாரேன்’ என்று.

விநாயகம் பயல் என்று அவன் மனம் எரிச்சலுடன் குறிப்பிட்ட திருவாளர் விநாயகம் இளம் வயசு நபரே ஆயினும் விநாயகம் பிள்ளை என்றே அந்த வட்டாரத்தில் அறிமுகம் ஆகியிருந்தார். அவர் கவலை இல்லாத மனிதர். அவரது உள்ளத்தில் கவலைப் பயிர் வளர்ந்ததோ என்னவோ, அதை அவர் வெளியே காட்டிக் கொண்டதில்லை. களிதுலங்கும் நகையும் கலகலவென்ற பேச்சுமாகத் திரியும் அவர் இருக்கிற இடத்தில் சிரிப்பும் தமாஷூம் நிலவும். அவர் கவிதைகள் எழுதுவதில் அக்கறை காட்டிய தில்லை. எனினும் கவி உள்ளம் படைத்தவர். வாழ்க்கையையே கவிதையாகச் சுவைத்து வாழக் கற்றுக் கொண்ட ரசிகர். அவர் கைலாசத்தின் நண்பர். அவன் எழுத்து முயற்சிகளைப் படித்து உற்சாகமாக அவ்வப்போது ஏதேனும் சொல்லி மகிழ்விப்பார்.

கைலாசம் சீக்காயிருக்கிறான் என்று கேள்விப்பட்டும் அவனைப் பார்க்க வரவில்லை அவர். அது அவனுக்குப் பெரும் மனக்குறையாகவே இருந்தது.

ஒருநாள் சாயங்காலம் தனியாக, சோர்ந்து போய் கிடந்தான் கைலாசம். அன்று அவனைப் பார்க்க யாரும் வரவில்லை. அநேகமாக எல்லோரும் ஒரு தடவை வந்து பார்த்து விசாரித்துப் போய் விட்டதனால், அவனைக் கண்டு போக வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. என்றாலும், இடைக்கிடை யாராவது தலையைக் காட்டி விட்டுப் போவது வழக்கம். அன்று பூராவுமே யாரும் வரவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் அலுவல்கள், கவலைகள், அலைச்சல்கள் எவ்வளவோ இருக்கும்தானே!

கைலாசம் தொய்ந்த மனசின் இருண்ட நினைப்புகளோடு ஒடுங்கிக் கிடந்தான்.

அப்போது வந்து சேர்ந்தார் விநாயகம் பிள்ளை. சிரிக்கும் கதிரொளி சட்டென அவ் அறையினுள் பாய்ந்தது போலிருந்தது அவர் வருகை.

கைலாசத்தின் கண்கள் அவர் கைகள் பக்கம் பாய்ந்தன. இது சமீப காலப் பழக்கமாகப் படிந்திருந்தது அவனிடம். வருகிறவர்கள் அவனுக்காக ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்ததால், அறைக்குள் புகுவோர் கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்று அறியும் ஆவல் அவனுள் கிளர்ந்தது. நாளடைவில், தன்னைப் பார்க்க வருகிறவர்கள் பழமோ,