பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


'இந்த மூக்கபிள்ளை புத்தி போனதைத்தான் பாரேன். சித்ரா பெளர்ணமி - நயினார் நோன்பு - வருஷத்திலே ஒரு நாள் விரதம் ஆச்சே? இட்லி உப்புமா இப்படிச் சாப்பிடுவாங்களா? சோறு வகைகளை தின்னப் போவாங்களா?" என்றனர் சில பேர்.

'அவன் யார் வீட்டு விருந்துக்கு வந்தான், நாம அவன் அழைச்ச உடனே அவன் வீட்டுக்கு போகனும் என்பதுக்கு? என்று கேட்டார்கள் பலர்.

ஆறுமுகம் இதைஎல்லாம் மூக்கபிள்ளையிடம் ரிப்போர்ட் பண்ணினான்.

தவசிப்பிள்ளைகளும் பரிமாற ரெடியாக நின்றவர்களும் பிள்ளையையும் சித்திரான்ன வகைகளையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இவ்வளவு ஏற்பாடுகளும் வீணாச்சுதே என்ற மனச்சுமை அவர்களுக்கு.

மூக்கபிள்ளை தொண்டையைச் செருமினார்: ஆறுமுகம் என்றார்.

'ஐயா!' என்றான் அவன் பணிவோடு.

'உனக்கு அழைப்புக் கூலி ரெண்டு ரூபாயா? ரெண்டுதரம் அழைச்சிருக்கே நாலு ரூபாயாச்சு. இன்னும் ரெண்டு ரூபா வாங்கிக்கோ. இந்த ஊர் பெரியவாள்களும் பிரமுகர்களும் தானே நம்ம வீட்டு விருந்துக்கு வரமாட்டோம்னு சொல்லிப் போட்டாக! போகட்டும். நீ வடக்கூர் கீழுர் பக்கம் போயி, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை எல்லாம் இங்கே வரசொல்லு ஐயா வீட்டிலே நயினார் நோன்பு பூசை சித்திரான்ன பிரசாதம்னு சொல்லி அனுப்பு. வருஷத்திலே ஒரு நாள்! அதுக புதுமையா, திருப்தியாச் சாப்பிடட்டும்... நீயும் வயிறாறச் சாப்பிடு. நீ சாப்பிட்ட பிறகு போனாப் போதும். வே, இலையைப் போடும் எனக்குப் பரிமாறும்! திண்ணையிலே இலை போட்டு ஆறுமுகத்துக்கு பரிமாறும். என்று மிடுக்காக உத்திரவிட்டார்.

'செய்தது எதுவும் வீணாகி விடாது' என்றார் அவர் தவசி பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வது போல.

- இருக்கிற சுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப் பதை விட, ஏழை எளியதுக வயிற்றுக்கு சோறு போடுவது ரொம்பப் பெரிய விஷயமாக்கும்!

இப்படிப் பொன்மொழி தீட்டிக் கொண்டது முக்கபிள்ளை மனம்.

(மஞ்சு, 1984)