பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முகம் Ꮾ5

கண்ட தெரிந்த முகமாகத் தோன்றுகிறதே! யாருடைய முகம் அது?

இந்தக் கேள்வி குறுகுறுக்க அவன் விழிப்புற்றான். அந்த முகம் நேரில் பார்த்தது போல் அப்பவும் பளிச்சென்று கண்முன் நின்றது. அதை அவனால் மறக்க முடியவில்லை.

அந்த முகம் அவனுக்குப் பித்தேற்றியது. எங்கோ அவளைப் பார்த்திருப்பதாக அவன் மனம் சொன்னது - எங்கே என்று தான் புரியவில்லை. யார் அவள் என்பதும் விளங்கவில்லை.

ஏன் அந்த முகம் திரும்பத் திரும்பப் பசுமையாகத் தோன்றி அவனை அலைக்கழிக்க வேண்டும்? தூக்கத்தில் கனவாக விழிப்பு நிலையில் நினைவுச் சித்திரமாக. -

அவன் அவனது எண்ணக் கட்டுப்பாட்டையும் மீறி அந்த முகத்தை வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்தான். இது பிறர் முறைப்பிலிருந்து, முணுமுணுப்பிலிருந்து, பரிகாசப் பார்வையிலிருந்து, கேலிச் சிரிப்பிலிருந்து, கிண்டல் சொல் உதிர்ப்பிலிருந்து, மெது மெதுவாகத்தான் அவனுக்குப் புலனாயிற்று.

தெருக்களில் நடக்கிற போது எதிர்ப்படுகிற பெண்களை, பஸ் நிறுத்தங்களில் காத்து நிற்கும் மகளிரை, ஒட்டலுக்குள் வருகிற - அங்கிருந்து வெளியேறுகிற - சுந்தரிகளை, சினிமா தியேட்டர்களின் கும்பல் மத்தியில் பளிச்சிடுகிற சிரித்த முகங்களை அவன் கூர்மையாக கவனிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். மற்றவர்கள் பார்வையில் உறுத்துகிற விதத்தில்.

அவனுடைய நண்பர்கள் கிண்டல் பண்ணலானார்கள். 'சந்திரனுக்கு கலர் தாகம் அதிகமாயிட்டுது!' 'வரவர டைவா (வாடை) ஜாஸ்தியாகுதே!' 'பொம்பிளை காந்தம் தீவிரமா இழுக்குது போலிருக்கே!'

அதுமாதிரி சமயங்களில் சந்திரன் அசட்டுச்சிரிப்பு சிரித்தான். இனி இப்படி பலருக்கும் தெரியும்படி கேணத்தனமாக முழிச்சுக்கிட்டுத் திரியக் கூடாது என்று தனக்குள் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டான.

அது வெகு விரைவிலேயே மங்கிப்போகும். பைத்தியமோ என்று பிறர் நினைக்கக் கூடிய விதத்தில் அவன் சிலசமயம் நடந்து கொள்வதும் உண்டு.

நெடுஞ்சாலை. முன்னே ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பின்புறத்தோற்றம் அவன் பார்வையை சுண்டி இழுத்தது. இவளாக இருந்தாலும் இருக்கலாம் என்று அவன் மனம் குறுகுறுத்தது.