பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 1940 முதல் நான் எழுதி வருகிறேன். பல நூறு கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். தமிழ் நாட்டின் பல பத்திரிகைகளிலும் எனது கதைகள் வெளிவந்தது உண்டு. எனது கதைகள் சிலவற்றை தமிழ் நாட்டின் எந்தப் பத்திரிகையும் வெளியிடத் துணியாததும் உண்டு. எண்ணங்களையும் சொற்களையும் கொண்டு வித வித எழுத்து முயற்சிகளைச் செய்து மகிழ்வதே எனது தொழில், பொழுதுபோக்கு, விளையாட்டு எல்லாம். ‘எழுத்து’ என் பிழைப்பு அல்ல. அதுவே என் வாழ்வு.

ஆகவே, எதிர்ப்படும் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலையுறாமல் நான் எழுதினேன். எழுதுகிறேன்...எழுதிக் கொண்டே இருப்பேன். பாராட்டுகளும், குறை கூறல்களும், போதிய கவனிப்பைப் பெறுவதும், கவனிக்கப்படாமலே போவதும் சகஜமான விஷயங்கள் தானே!

இத் தொகுதியில் உள்ள கதைகள் 1950-லிருந்து 1958-க்கு இடைப்பட்ட பல்வேறு சமயங்களில் வெவ்வேறு பத்திரிகைகளில் இடம் பெற்றவை. ‘வஞ்சம்’ என்கிற நெடுங்கதை ‘அமுதசுரபி’யில் வந்தது. எவ்வளவோ பேர் கவனத்தைக் கவர்ந்தது. கதையைப் பாராட்டியவர்களில் அநேகர் ‘இப்படி நடக்க முடியுமா? இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.

கதை எழுதுகிறவன் எதையும் எப்படியும் எழுதலாம்; ஆனால், சொல்கிற விஷயத்தைச் சுவையாகச் சொல்லக் கற்றிருக்க வேண்டும்; அது தான் முக்கியம்-இதுவே என் நோக்கம். எனக்கு நம்பிக்கை உள்ள விஷயங்களைப் பற்றி மட்டும் தான் நான் எழுதவேண்டும் என்கிற விதி எதுவும் இல்லையே! வாழ்க்கையில் நான் ஒரு மாணவன். அனுபவம் கற்றுத் தருகிற விஷயங்களை அழகாகச் சொல்லிலே தீட்டி வைக்கும் ஆசை எனக்கு உண்டு. அதன் விளைவுகளே என்னுடைய எழுத்துக்கள். நான் கண்டவை, கேட்டவை, எனது நண்பர்கள் சொன்ன சிறு கருத்துக்கள், நான் படித்த விஷயங்கள், தூண்டிய எண்ணங்கள், வாழ்வில் நடப்பவை, நடக்காதவை எல்லாம் தான் என்கதைகளுக்குக் கரு அமைத்துச் கொடுக்கின்றன.