16
குழந்தை வைத்தியம் குப்பிப் பாட்டியை அழைத்துவந்து காட்டினான்—பிறகு கட்டு மாத்திரை கந்தப் பண்டிதரை அழைத்துவந்தான்—பிறகு மிஷன் ஆஸ்பத்திரிக்குக் குழந்தையை எடுத்துச் சென்றான்—பிறகு டாக்டர் சோமு L. M. P. யை அழைத்தான், அடுத்தபடி டாக்டர் சுந்தரம் M.B.B.S. வந்தார், பிறகு டாக்டர் தாமோதரம் வந்து பார்த்தார்—இதற்கிடையே, மிளகு மந்திரிக்கும் மாரிசாமி, கோழி சுற்றிவிடும் கோலப்பிள்ளை, விபூதிதூவும் மாயாண்டி இப்படிப் பல மந்திரவாதிகளின் துணையையும் நாடினான் — விளக்கு வைத்தான் கோயிலுக்கு—குலதேவதையை வேண்டிக்கொண்டான் — மஞ்சள் துணியால், குழந்தையின் கையிலே காப்புக் கட்டினான்—இவ்வளவெல்லாம் செய்தான் பிறகு, அலுத்துப்போய், பலன் காணாமல் பதைத்துப் போய், இனி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கும் போதுதான், பாண்டுரங்கன், கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றான் துவக்கத்திலே அல்ல — முயற்சி செய்து பார்க்காத முன்பு அல்ல—வீட்டு வைத்தியம், டாக்டர், மந்திரம், பூஜை, இவ்வளவுக்கும் பிறகு, வழக்கமான பல வழிகளையும் பார்த்தான் பிறகு, சொன்னான், கடவுள்விட்ட வழிப்படி நடக்கட்டும், என்று. அப்படி அவன் சொன்னது ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையின் விளைவு என்று கூறப்படுமானால், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதும், அவன், பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டானே, அப்போது அவன், யாராக இருந்தான் — ஆத்திகனாகவா நாத்திகனாகவா? சிந்தித்துப் பாருங்கள்—சிக்கலாக மட்டுமல்ல, சுவை தருவதாகவும் இருக்கும்.
பொதுப்படையாக எண்ணிப் பார்ப்பது கடினமாக இருக்கக்கூடும், பலருக்கு எப்போதும் — சிலருக்குச் சில