வள்ளிநாயகியின் கோபம்
“வள்ளி! இப்படி அடிக்கடி கோபித்துக்கொண்டால் என்னதான் செய்வது? நான், உன் மனம் கோணும்படி, நடந்துகொண்டதுண்டா? ஏன் முகவாட்டம்? எவ்வளவோ தொல்லைகளை நான் பட்டவண்ணம் இருக்க நேரிடுகிறது. திருப்புகழ் பாடிப்பாடி அழைப்பவரை நாடிச் சென்று, அவர்கள் நாவில் உறையும் வார்த்தைகளுக்கும் நெஞ்சிலுள்ள எண்ணங்களுக்கும் பொருத்தமிருக்கிறதா என்று கண்டறிய வேண்டி பாடுபட நேரிடுகிறது. இனிய குரலிலே பாடுகிறார்கள்! என்னப்பனே! முருகா! என்று உருகும்போது, ஒரு விநாடி நானே மயங்கிவிடுகிறேன். கூர்ந்து பார்க்கும்போது தான், அந்த உருக்கமான குரல் எனக்கல்ல, பொன்னுருக்கு மேனியாளாகிய ஒரு பாவைக்கு என்பது புரிகிறது! இப்படி பரீட்சை பல நடத்தி வரவேண்டி இருக்கிறது. அலுவலை முடித்துக்கொண்டு அலுத்து வீடு திரும்பினால், நீ உன் அழகை மறைத்துக்கொண்டு என்மீது அனலை வீசுகிறாய். இது ஏன் என்று கேட்டாலோ புனலைச் சொரிகிறாய், வள்ளி! உள்ளதைச் சொல்லு! கள்ளத்தனமாக உந்தனை நான் அன்று காண வந்தேனே தினைப்புனந்தன்னில், அன்று இருந்த அன்பு, ஏன் இப்படிக் குறைகிறது?” என்று ஆறுமுகனார், கண்களைத் துடைத்தவண்ணம் இருந்த, வள்ளி நாயகியைக் கேட்டார்.