94
“தேவி, கேள் இந்த விஷயத்தை. இந்த பக்தர்களை இன்னின்னது செய்யுங்கள், என் மனமகிழ்ச்சிக்காக, இன்னின்னது படையுங்கள் என்று நான் கேட்டதுமில்லை—அவர்களாகவே வருகிறார்கள்—அவரவர்கள் மனதுக்குத் தோன்றியபடி ஏதேதோ செய்கிறார்கள், நான் சிவனே! என்று எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என் பொறுமை, பெருந்தன்மை இவைகளைக் கண்டு இந்த பக்தர்கள், என்னை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு கொண்டு... ... ... ...” கருப்பண்ணரின் தொண்டை அடைத்துக்கொண்டது துக்கத்தால். தேவியின் ஆச்சர்யம் அதிகரித்தது. “துணிவு கொண்டு...சொல்லும் கருப்பண்ணரே! துணிவு கொண்டு...” என்று ஆவலை வார்த்தைகளாக்கினார் தேவி. ஆத்திரத்துடன் கூறினார் கருப்பண்ணசாமி, “ஒரு அறையிலே போட்டு பூட்டிவிட்டார்கள்!”-என்றார். தேவிக்கும் இலேசாகத் திகில் ஏற்பட்டது.
“பூட்டிவிட்டார்களா? உன்னையா? பக்தர்களா?”—என்று திகைப்புடன் தேவி கேட்டார்கள்.
“கேட்பதற்கே இவ்வளவு திகில் பிறக்கிறதே தேவியாரே! என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? என்னை ஒரு அறையிலே போட்டு, பூட்டினபோது. நான் என்ன கழனிவேலை செய்யும் கருப்பண்ணனா சாமி-சாமி-விட்டுவிடுங்க-என்று கதற! நானோ அவர்கள் கும்பிட்டு வரங்கேட்கும் கருப்பண்ணஸ்வாமி! அவர்களோ என்னையே அறையிலே தள்ளிப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். நான் என்ன செய்வது!”—என்று கூறி, ஆயாசமடைந்தார் கருப்பண்ணசாமி.
தேவி, உண்மையிலேயே அனுதாபப்படத் தொடங்கினார்கள்.
“கேவலமான நிலைமைதான் இது. பக்தர்கள் உன்னைச்