பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகைவண்டி, நிலஊர்தி, வானஊர்தி முதலியவற்றின் மூலமாக வழி கடப்பது இந்தக் காலம்; பெரும்பாலும், கட்டை வண்டி, கால்நடையின் மூலமாக வழி கடந்தது அந்தக் காலம். தம்மூரில், தம் வீட்டில் காலை உணவு உண்டு, பின் தொலைவில் உள்ள வெளியூர்கட்குச் சென்று வேலையை முடித்துக்கொண்டு தம் வீடு திரும்பிவந்து அடுத்த வேளை உணவு உண்ணுவது இந்தக்காலம்; கட்டு சோறு கட்டிக்கொண்டு நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வெளியூர்சென்று மீண்டது அந்தக்காலம். கண்ட இடங்களில், கண்ட நேரங்களில், கண்ட உணவுச்சாலைகட்குள் புகுந்து காசை இறைத்து வயிற்றைநிரப்புவதற்கு வாய்ப்பு மிகமிகக் கிடைக்கப் பெற்றிருப்பது இந்தக் காலம்; கட்டுசோற்று மூட்டை கரைந்த பின்பு, ஊர்க்குள் புகுந்து ஊராரின் உதவி பெற்றது அந்தக் காலம். எனவே, இல்லறத்தான் விருந்தோம்ப வேண்டும் என்று அந்தக் காலத்தில் வள்ளுவர் வற்புறுத்தியிருப்பது பொருத்தந்தானே! எல்லாம் வளர்ச்சி பெற்ற இந்தக்காலத்திலும் இவ்விருந்தோம்பல் தேவைப்படுகின்ற தென்றால் மேலும் கூறுவானேன்? . எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கே (எள் +நெய்) எண்ணெய் என்று பெயர்; அந்தப் பெயர், பின்பு தன்னோடு ஓரளவு ஒப்புமை உடைய ஏனைய எண்ணெய்களுக்கும் வழங்கப்பட்டதைப்போல, புதியோரைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், பின்பு அவரைப்போல் வந்து போகும் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, இதுகாறும் கூறியவற்றால், தம்மை நாடிவரும் புதிய விருந்தினரை ஒம்ப வேண்டியது இல்லறத்தானுக்குரிய கடமைகளுள் ஒன்று என்பது உணரப்பெறும். ஒக்கல் என்றால் சுற்றத்தார்கள். இல்லறத்தான் தன்னைச் சேர்ந்த சுற்றத்தார்களையும் ஓம்பவேண்டும். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்கல் என்பது நாம் அறிந்ததுதானே! முதல் குறளில் உள்ள "இயல்புடைய மூவர்" என்பதற்கு, பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவர் எனப் பொருள் 12 பேரா. சுந்தர சண்முகனார்