பக்கம்:வழிப்போக்கன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ற்காட்டிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ளது மாங்குடி கிராமம். சுந்தரம் பிறந்தது அந்தக் கிராமத்தில்தான்.

{சுந்தரம் வீட்டில் ஒரே மகன்; செல்லப்பிள்ளை. எனவே “அவன் மேலே படிக்க வேண்டிய அவசியமில்லை. ஊரோடு இருந்து நிலங்களைப் பார்த்துக் கொண்டாலே போதும்; உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று கூறிவிட்டார் அவன் தந்தை. நாலாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்ட சுந்தரத்தின் புத்தி குரங்காட்டம் ஆடியது. அதை அவன் எத்தனை நாட்களுக்கு அடக்கி மடக்கி வைத்திருக்க முடியும்?

சித்திரக் கலையில் அவனுக்குக் கொள்ளை ஆர்வம் இருந்தது. அவனிடம் மறைந்துள்ள கலைத் திறமையை, ஆர்வத்தைத் தூண்டிவிட யாருமே முன்வரவில்லை. ஆகவே, தனக்குத் தானே முயற்சி கொண்டான் அவன். பாடப் புத்தகங்களிலும் காலண்டர்களிலும் காணப்பட்ட படங்களைப் பார்த்துப் பார்த்து அவற்றைப் போலவே எழுதிப் பழகினான்.

அப்போது கோடை விடுமுறை, வெளியூருக்குப் படிக்கச் சென்றிருந்த மாங்குடி கிராமத்துப் பிள்ளைகள் எல்லோரும் விடுமுறையைக் கழிக்க ஊருக்கு வந்திருந்தார்கள். அந்தப் பிள்ளைகளைக் காணும் போதெல்லாம் சுந்தரத்துக்குத் தானும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வரவில்லையே என்ற ஏக்கமும் வெட்கமும் ஏற்படும்.

“ஊர்ப் பிள்ளைகளெல்லோரும் வெளியூருக்குப் போய்ப் படித்து விட்டு வருவதைப் பார்க்கும்போது எனக்கு வெட்கமாயிருக்கிறதம்மா! அவர்களைப் போல் நானும் படிக்கப் போகிறேன்.” உறுதியோடு, உணர்ச்சியோடு கூறினான்—துணிவுடன் தவம் செய்யக் கிளம்பிவிட்ட துருவனைப் போல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/13&oldid=1306853" இலிருந்து மீள்விக்கப்பட்டது