பக்கம்:வாழையடி வாழை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னுரை

    தமிழ் இலக்கியப் பேரியாறு காலங்காலமாக வளங் கொழித்து வற்றாது ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் பல்வேறு சுவையுடையன; பல்வேறு நோக் குடையன. அவ்வக்காலத்தில் வாழ்ந்த கவிஞர் பலர், தமிழ் இலக்கியத்திற்குத் தம்முடைய காணிக்கையாக நல்ல பல நூல்களை இயற்றித் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்கிச் சென்றுள்ளனர்.
    பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்து, அந்நாளைய மக்களைக் குறித்தும் அவர்கள் ஒழுகலாறு குறித்தும் அறிந்து கொள்வதுபோல, இக் காலத்தில் எழும் இலக்கியங்களையும் வாழ்த்தி வரவேற்றுப் படித்து மகிழவேண்டும். பழைய இலக்கியங்களைப் படித்து மகிழ்கின்ற நாம் புதிய இன்றைய இலக்கியங்களையும் ஏற்றுப் போற்றவேண்டும். இன்று எழுகின்ற இலக்கியங்களே, நாளை வரப்போகின்ற சமுதாயத்

திற்குப் பழைய இலக்கியங்களாகும். எனவே, வாழும் இலக்கியங்களை நாம் வகையுறக் கற்கவேண்டும். அந்த எண்ணத்தில் எழுந்ததே 'வாழையடி வாழை'என்னும் இந்நூல்.

   இந்நூலில், 'வாழையடி வாழையென வந்த திருக் கூட்டத்தில்'வந்தவராகத் தம்மைக் குறிப்பிட்டுக்கொள்ளும் வடலூர் இராமலிங்க வள்ளலார் முதலாகக் கவிஞர் திரு. தமிழழகர் ஈறாக நல்லிசைக் கவிஞர் பதின்மரின் கவிதை நலன்கள் புலப்படுத்தப்பட்டுள்ளன.
     இக் கட்டுரைகள் அனைத்தும் சுவையுணர்திறத்தில் (Appreciative way) எழுந்தனவேயன்றித் திறனாய்வு (Criticism) என்னும் நோக்கில் அமைந்தன அல்ல.கவிஞர்கள், கவிதையில் ஒளிரும் கவிதை நலன்களை அகழ்ந்தெடுத்துக் காட்சிப் பொருளாக-சுவைப்பொருளாக-உங்கள் முன் படைத்தது ஒன்றே இந்நூலில் யான் மேற்கொண்ட பணி. தமிழ் மக்கள் இந்நூலின் பயன் கண்டு மகிழவேண்டுகிறேன்.

சி. பாலசுப்பிரமணியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/5&oldid=1332267" இலிருந்து மீள்விக்கப்பட்டது