பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9 வல்லிக்கண்ணன் அவர்கள் ஷெல்லி, டிக்கன்ஸ், பெர்னாட்ஷா, ரஸ்ஸல், மாப்பசான், விக்டர்ஹறியுகோ, எமிலிஜோலா, டால்ஸ்டாய், மார்க்சிம் கார்க்கி, செகாவ், ஹெமிங்வே ஆகியோர்தம் எழுத்துகளில் மனத்தைப் பறிகொடுத்துப் படித்துக் கொண்டே இருந்தவர். ‘வாழ்க்கைச் சுவடுகள் என்னும் நூலில் இவர் படித்த நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது படிப்பின்மேல் இவருக்கு இருந்த வெறியும் தாகமும் நம்மை வியக்க வைக்கின்றன. - ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்னும் இந்நூல் எழுத்தாளர் வல்விக்கண்ணன் அவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் மட்டுமன்று. அவர்காலத்திய சமுதாய வாழ்வின் கவடுகளாகவும், மக்களின் பண்பாட்டுச் சுவடுகளாகவும் விளங்குவன. அவருடைய எழுத்தின் வரலாறு மட்டும் இங்குப் பதிவு செய்யப்படவில்லை. அவர்காலத்திய பிற எழுத்தாளர்களின் எழுத்துவரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது; மானுடநேயத்தின் வரலாறாகவும் விளங்குகின்றது. வால்காவிலிருந்து கங்கை வரை’ என்பது போல நெல்லை முதல் சென்னை வரை பல இலக்கிய, பண்பாட்டு, சமூக வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப் பெற்றுள்ளன. வரலாற்று ஆய்வு அறிஞரான டாக்டர் மா. இராசமாணிக்கனார் பெயரில் அமைந்துள்ள ஆய்வுவட்டம் இவ்வரிய நூலை முதல் வெளியீடாகக் கொண்டுவருவதில் மகிழ்ச்சி கொள்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் பெறுமிடத்தை அவர்தம் ‘வாழ்க்கைச் சுவடுகள் நன்கு புலப்படுத்துகின்றன. பல்துறை வித்தகராகப் பொலியும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் பன்முக ஆளுமை இந்நூலால் தெளிவுறுகின்றது. ஆய்வு வட்டத்தின் முதன்மைநோக்கம் நாட்டிற்கும், மொழிக்கும், இனத்திற்கும் உழைத்துவரும் சான்றோர்களின் வரலாற்றை எதிர்வரும் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே. இவ்வகையில் இவ்வரிய நூலை வெளியிடுவதற்கு வாய்ப்பு நல்கிய எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கட்கும், நூலை வெளியிட்டுதவிய பூங்கொடி பதிப்பகத்தார்க்கும், இப் பணிக்குத் துணைநின்ற பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் அவர்களுக்கும், நன்முறையில் அச்சிட்டு உதவிய அலமு அச்சகத்தாருக்கும், டாக்டர் மா.இராசமாணிக்கனார் ஆய்வு வட்டத்தாருக்கும் குறிப்பாக, இப்பணிகளில் பெருந்துணைபுரியும் பேராசிரியர் மா.ரா. அரசு அவர்கட்கும் நன்றி உரியது. டாக்டர் மா. இராசமாணிக்கனார் இ. சுந்தரமூர்த்தி ஆய்வு வட்டம் . சென்னை-600 102