பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 வாழ்க்கைச் சுவடுகள் அமைதி ஆனந்தம் எப்போதும் கிட்டுவதற்கு ஆண் பெண் சேர்ந்து வாழ்கிற குடும்ப வாழ்க்கை வழிசெய்வதாயில்லை. இதையும் மனித வாழ்க்கை எடுத்துக் காட்டியவாறு இருக்கிறது. நான் என்றும் எப்போதும் அன்பு வளர்த்து அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ விரும்பினேன். ஆகவே தனியனானேன். பணவருவாய் சீராகவும் நிறைவானதாகவும் இருந்தால்தான் குடும்ப வாழ்வில் ஓரளவு அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பொருளாதாரத் தேவைகளும் பற்றாக்குறைகளும் சதா முணுமுணுப்புகள், குறைகூறல்கள், சச்சரவுகள், பழித்தல்கள் முதலியவற்றுக்கே இடம் தரும். அப்போது ஆணும் பெண்ணும் பரஸ்பரம் வெறுப்பது-விரோதிப்பது-விலகுவது-பிரிந்து வாழ்வது எல்லாம் நிகழ்கின்றன. திருப்தியற்ற சேர்ந்து வாழ்தலில் ஆண் பெண்ணைக் குறை கூறுவது பழிப்பது அடிப்பது முதலியன தலையெடுக்கின்றன. பெண் மரியாதை குறைந்து நீ-அவன் என்றெல்லாம் பேசிப் பழிப்பது குடும்ப வாழ்க்கையில் சகஜமாக நிகழ்கின்றன. பன்றி, நாய், என்றெல்லாம் வசைமாரி பொழிவதும், பின்னர் குழைந்து இணைவதும் இயல்பாக இருக்கிறது. உன்னைக் கட்டிக் கொண்டு நான் உருப்படாமல் போனேன் எனக் கணவன் அலுத்துக் கொள்வதும், எங்க அப்பா அம்மா என்னைப் பாழுங்கிணற்றில் கொண்டாந்து தள்ளிட்டாங்க என்று மனைவி புலம்புவதும் குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி நிகழ்கிற நிகழ்ச்சிகளாக உள்ளன. அதுமட்டுமல்ல, கணவன் இறந்துவிட்ட பிறகு வாழ்க்கைத் துயரில் வாடும் பெண்கள், பாவிமட்டை இருந்தும் கெடுத்தான்-செத்தும் கெடுத்தான் என்று கசந்து கண்ணிர் வடிப்பதும் நடக்கிறது. நான் வாழ்கிறபோது என்னை யாரும் மனக்கசப்புடன் குறைகூறி வசைபாட வேண்டாம் நான் செத்ததற்குப் பிறகும் எவளும் என்னைத் தூற்றிப் புலம்பவும் வேண்டாம் என்று எண்ணினேன். அதனாலும் நான் பெண்ணின் துணையையும் குடும்ப வாழ்வையும் வேண்டாம் என ஒதுக்கினேன். புத்தகங்கள் படிப்பது எனக்குச் சலிப்பு ஏற்படுத்தவில்லை. புத்தகங்கள் வாழ்க்கையை-மனிதர்களை-உலகத்தை விசாலப்பார்வையால் விழுங்குவதற்குத் துணை செய்யும் சாதனங்களாக இருக்கின்றன. ஒருவர் பலதரப்பட்ட-சகல விதமான அனுபவங்களையும் தாமே அனுபவித்து அறியமுடியாது. அனைத்து இடங்களையும், இயற்கையின் அற்புதங்கள் அதிசயங்கள் அழகுகளை எல்லாம் கண்டறிவதும் சாத்தியம் இல்லை. இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள-ரசிக்க புத்தகங்கள் உதவுகின்றன. ஆகவே, பலவிதமான புத்தகங்களையும் படித்துத்