பக்கம்:வாழ்க்கை.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
127
 

தில்லை. மரணத்தின் பின்னும் இது நிலைத்திருக்கிறது.

மனிதன் தன் உடலிலும் உணர்ச்சியிலும் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு அஞ்சுவதில்லை. அவைகளை வரவேற்கிறான். இளமைப் பருவத்திலிருந்து அவன் பெரியவனாக விரும்புகிறான். தனக்கு ஏற்பட்ட புண்கள் ஆறவேண்டுமென்றும் விரும்புகிறான். ஒரு சமயம் ஒன்றுமே தெரியாமல் வயிறு பசிக்கும் பொழுது மட்டும் அழுதுகொண்டிருந்த குழந்தையாகத் தோன்றிய மனிதன், இப்போது தாடியும் மீசையும் பெற்று, ஆராய்ச்சி அறிவுடன் விளங்குகிறான்; ஸ்திரீயா யிருந்தால் வயதுவந்த தன் மக்களைக் கண்டு பரவசப்படுகிறான். மாற்றங்கள் மனிதனைப் பயமுறுத்துவதில்லை எனினும், மரணத்தினால் ஏற்படும் மாறுதலுக்கு மட்டும் மனிதன் அஞ்சுகிறான்.

வாழ்க்கை முழுவதையும் அவன் சேர்த்துப் பாராமல், உடலை மட்டுமே பார்ப்பதால், இந்த அச்சம் தோன்றுகிறது. பைத்தியம் பிடித்த ஒருவன் தன் உடல் கண்ணாடியால் செய்யப்பெற்றது என்று எண்ணிக் கொண்டான். ஒரு சமயம் அவன் கீழே விழுந்து விட்டான். விழுந்ததும், ‘எல்லாம் நொறுங்கி விட்டது!’ என்று கூவினான். அப்படியே மரித்து விட்டான்! உடல் இயக்கத்தை மட்டும் முழு வாழ்க்கையாகக் கொள்வது இதைப் போன்ற செயலேயாகும். வாழ்க்கை முழுமையையும் எடுத்துக் கொள்பவனுக்கு மேலும் கிடைக்கும்; அதில் பகுதியை மட்டும் பற்றிக்கொண் டிருப்பவனுக்கு உள்ளதும் போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/134&oldid=1122356" இருந்து மீள்விக்கப்பட்டது