பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு ஈனும் ஆர்வம்

127

தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை.

      "அன்பினை எடுத்துக் காட்ட
       அளவிலா ஆர்வம் பொங்கி"

என்பது சேக்கிழார் திருவாக்கு.

ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை-உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

நட்புக்கு மறுபெயர் தோழமை.நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். “சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு” (குறள்—74)

இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச்செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Apptitube என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/129&oldid=1145424" இலிருந்து மீள்விக்கப்பட்டது