பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் நானும் நண்பர்கள் சிலரும் திருவையாற்றில் நடைபெற்ற தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். காவிரிப் படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, நாலைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டோம். தென்னையும், வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும், விபூதி பூசிய ரசிகர்களுக்குமிடையே அந்த வெள்ளைக் காரர்கள் சற்றும் பொருத்தமில்லாதவர்களாய்க் காணப் பட்டனர். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டனர் நண்பர்கள். "இந்த இடத்தில் இவர்களைக் காணும்போது விசித்திர மாயிருக்கிறது" என்றேன். 'நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்த கையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!" என்றார் நண்பர்களில் ஒருவர்.