பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் கிராமம்

31

விளையும் பயிர்களைப் பூச்சிகள் அரித்துவிடாமலும் பயிர்கள் சாவியாகாமலும் இருக்க விஞ்ஞானிகள் வழிகள் கண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விளைச்சலின் போதும் எலிகள், வெட்டுக்கிளிகள் போன்றவற்றால் உணவுப் பொருள்களுக்கு சேதமேற்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஐந்நூறு கோடி ரூபாய் பெறுமான உணவுப்பொருள் இவ்வாறு பாழடிக்கப்படுகிறது.

நமது உணவுக்கு இன்னொரு முக்கிய எதிரி பருவ நிலை. இதிலிருந்து உணவைப் பாதுகாக்கப் பலமுறைகள் கையாளப்படுகின்றன. காற்றுப் புகாத பாத்திரங்களில் உணவை அடைத்து வைத்தல் ஒரு முறை. இதனால் காற்றின் வழி மிதக்கும் கிருமிகள் உணவுப் பொருளை அடைந்து தீங்கு செய்யமுடியாதவாறு தடை செய்யப்படுகின்றன. உணவுப் பொருளிலிருந்து நீர்ப் பகுதியைத் தனியே பிரித்துவிடுதல் இரண்டாவது முறை. இம்முறையினால் தண்ணீரில் கிருமிகள் வளர்ந்து பொருளை அழுகும்படிச் செய்வது தடைப் படுத்தப்படுகிறது. மூன்றாவதாகக் குளிர வைக்கும் முறை. மிகவும் குளிர்ந்த சூழ்நிலை அமைந்த பெட்டியில் உணவுப் பொருளை வைத்திருப்பதே இம்முறை. இதனால் தகுந்த வெப்பம் இல்லாது கிருமிகள் அழிகின்றன. ஆக, உணவு கெடுவது தடுக்கப்படுகிறது. இத்தகைய பாதுகாப்பு முறைகள் உணவின் அளவைப் பெருக்கா விட்டாலும் சேமித்து வைக்கப்பட்ட உணவைப் பாதுகாக்கின்றன. இதுவே ஒருவகை வளர்ச்சிதானே!