பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. மின்சாரம்

ரும் பெரும் சாதனைகள் புரிந்த ஒரு மனிதனைப் பற்றி அறிந்து கொள்வதில் நமக்கு எல்லோருக்குமே விருப்பம் அதிகம். அந்த மனிதனுடைய பிறப்பு, வளர்ப்பு முதலியன வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டிகளாக அமைய வல்லன. இதே போலத்தான் மின்சாரத்தின் தன்மையும். இன்று மின்சாரம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தன் திறனைக்காட்டி மின்னிடுகிறது. மின்சாரம் இல்லையென்றால் இன்று உலகம் இருண்டு விடும்; சுருங்கி விடும்; கலை வளராது; காணும் சுறுசுறுப்பு கடுகளவாகிவிடும். இத்திறம் படைத்த மின்சாரத்தின் பிறப்பு, வளர்ப்பை அறிந்து கொள்வோம்.

மின்சாரம் என்னும் திறன் எப்போதும் உலகில் இருந்தது. அத்திறன் வெளிப்படுத்தப்பட்ட தன்மையைத்தான் நாம் மின்சாரத்தின் பிறப்பு என்று சொல் கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க, ரோமநாட்டு விஞ்ஞானிகள் இத்துறையைத் தொடங்கி வைத்தார்கள். ஆம்பர் எனப்படும் கோந்து வகைக் கோல் ஒன்றை கம்பளி ஆடையில் தேய்த்து பறவை இறக்கைகளை அதன் அருகில் கொண்டு சென்றபோது அவை ஈர்க்கப்படுவதை அறிந்தனர். அவ்வாறு முயற்சி செய்ததில் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் தேல்சு என்பவரும் பிளைனி என்பவரும் ஆவர். பிளைனி என்பவர் வெசூவியசு எரிமலையை ஆராயப் புகுந்து அந்த நெருப்பிலேயே வெந்து போனார். மத்திய காலத்து விஞ்ஞானிகள் மின்சாரத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.