பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


104. மேலே பறக்கும் வால் நீண்ட குதிரைக்குத்
        தரையிலே இருக்கும் தம்பி கையில் கடிவாளம்.

105. ஒன்றும் இரண்டும் கலப்பு:
        உள்ளங்கையால் பிடிப்பு;
        ஆவியிலே நடப்பு:
        ஆண்டவனுக்குப் படைப்பு.

106. குண்டோதரன் வயிற்றிலே,
        குள்ளன் நுழைகிறான்.

107. இறந்த மாட்டை
        அலற அலற அடிக்கிறார்கள்.

108. எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை.

109. வட்ட முகம் உண்டு, வாய் திறந்து பேசாது.
        காட்டக் கை உண்டு, காலூன்றி நடக்காது.

110. வட்ட வட்டச் சிங்கண்ணா,
        வாயில்லாத சிங்கண்ணா,
        எலும்பில்லாத சிங்கண்ணா,
        என்னை வந்து எழுப்பண்ணா.

111. முற்றத்தில் நடப்பாள்;
        மூலையில் கிடப்பாள்.

112. தொட்டால் சுருங்கி - அதற்குத்
        தொண்ணுறு கால்.

113. ஊருக்கெல்லாம் ஒரே கூரை - அது என்ன?

114. அரக்கன் தலை - அதோ
        அந்தரத்தில் தொங்குது.

115. சாத்தின. கதவு இருக்க,
        ஏத்தின விளக்கு இருக்க,
        இராத்திரி வந்தது யார்?
        இசையோடு எழுப்பியது யார்?

116. வாயில் பற்கள் உண்டு; கடிக்காது,
        தலையைப் பிராண்டும்; வலிக்காது,
        அழுக்கை அகற்றும்; பூச்சியைப் பிடிக்கும்.
        அது என்ன?

117. அடித்தால் அழுவான்; பிட்டால் சிரிப்பான்.