பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

149. இரண்டு தோட்டத்துக்கு நான்கு வேலி,
        பூ பூத்ததோ தோட்டம் பாழ்.

150. கடல் நீரில் வளர்வேன்; மழை நீரில் மடிவேன்.

151. மாட மாளிகையில் வசிப்பான்; மன்னவனும் அல்ல.
        கூட கோபுரத்தில் வசிப்பான்; கொற்றவனும் அல்ல.

152. கரை உண்டு; படிக்கட்டு இல்லை.
        தலைப்பு உண்டு; கட்டுரை இல்லை.

153. அண்ணன் வீட்டில் தம்பி போகலாம்;
        தம்பி வீட்டில் அண்ணன் போக முடியாது.

154. உரசினால் போதும்; உயிர் முடிந்து போகும்.

155. இறக்கை இல்லாத குருவிக்கு
        இரும்பிலே மூக்கு.
        பாய்ந்து செல்லும் குருவிக்குப்
        பஞ்சிலே வால்.

156. ஆனைக்கும் குதிரைக்கும்
        அண்டாத தண்ணீர்.
        தொண்டைமான் குதிரைக்குத்
        தொடையளவு தண்ணீர்.

157. பூவில் பிறக்கும் - அது வாயில் சுவைக்கும்.

158. மத்தால் அடித்து, பத்துப்பேர் பிடித்து,
        பதமாய் எடுப்பது எது?

159. கையில் பந்தாடும்; கதிரவனுடன் போராடும்.
        கனலுக்கு இரையாகும்; கரிசாம்பல் பொடியாகும்.

160. கால் நான்கு; நடக்காது;
        கண் ஆயிரம்; இமைக்காது.

161. உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல.
        உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல.
        நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல.
        நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல.

162. ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே
        பச்சைப் பாம்பு தொங்குது.

163. மஞ்சப் பெட்டி, மரக்காப் பெட்டி,
        ஒருநாளும் திறக்காப் பெட்டி.