பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

298. ஆனை விரும்பும்; சேனை விரும்பும்.
        அடித்தால் வலிக்கும்; கடித்தால் இனிக்கும்.

299. காய்த்த மரத்திலே கல் எடுத்துப் போட்டால்,
        காவல்காரப் பையன் கோபப்பட்டு வருவான்.

300. இட்டேன்; எடுக்க முடியவில்லை.
        பூசினேன்; புடமுடியவில்லை.

301. பச்சை பச்சை டாக் டாக்.
        பால் பால் டாக் டாக்.
        குண்டு சட்டி டாக் டாக்.
        குதிரை வாலு டாக் டாக்.

302. காட்டுக்குப் போனேன்;
        இரண்டு விறகு கொண்டு வந்தேன்.
        பகலிலே ஒன்று, இரவிலே ஒன்று எரித்தேன்.

303. கடகடா குடு குடு; நடுவிலே பள்ளம்.

304. ஆழக் குழி தோண்டி, அதில் ஒரு முட்டையிட்டு,
        அண்ணாந்து பார்த்தால் தொண்ணுாறு முட்டை.

305. இத்துனூண்டு சிட்டுக் குருவி,
        இழுத்து இழுத்து முள் அடைக்குது.

306. அஞ்சு விரல் அமர்ந்தாட,
        பத்து விரல் பந்தாட,
        சூரியனுடன் வாதாட,
        எமனுடன் போராட - அது என்ன?

307. தன்னைத் தானே பலிகொடுப்பான்;
        பிறருக்கு ஒளி கொடுப்பான்.

308. கடையிலே விற்கிற சாமான்களில்,
        அத்தை ஒன்று, ஆணி ஒன்று.

309. சாம்பலாண்டியும் சந்தைக்கு வந்தான்;
        உச்சிக் குடுமியும் சந்தைக்கு வந்தான்;
        ஒரு முதுகெலும்பனும் சந்தைக்கு வந்தான்.