பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

எஸ். எம். கமால்


இராமநாதபுரம் சீமை விளை நிலங்களும் நஞ்சை, புஞ்சை என்ற பிரிவுடன் நஞ்சை வான்பயிர், புஞ்சை வான்பயிர், நஞ்சைத்தரம் புஞ்சை, குளம்கோர்வை என அந்த மண்ணின் தரம், பாங்கு, விளைச்சல் ஆதாரம் ஆகியவைகளைக் கொண்டு பாகுபாடுகள் செய்யப்பட்டன. இவைகளில் இருந்து கிடைக்கும் விளைச்சல் தீர்வையை அந்த நிலத்தில் செய்யப்படும் வேளாண்மைச் செலவு, ஈடுபடுத்தப்படும் உழைப்பு, எதிர்பார்க்கப்படும் விளைச்சலின் மதிப்பு இவைகளை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த புதிய முறையினால் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் சரியான வழியில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டதுடன் குடிமக்களும் தங்களது உழைப்பிற்கும் விளைச்சலுக்கும் ஏற்ற தீர்வையை மட்டும் செலுத்த வேண்டியவர் ஆயினர். கிடைக்கும் மகசூல் எதுவோ அதன் பகுதியை அப்படியே தீர்வையாக செலுத்தும் பழக்கம் அதுவரை நடை முறையில் இருந்தது. அதனை மாற்றி தீர்வைக்கான மகசூலின் மதிப்பை ரொக்கமாக பணத்தில் செலுத்தும் முறையும் புகுத்தப்பட்டது.[1] இதனால் குடிகள் தாங்கள் விளைவு செய்த பொருளை அப்படியே அரசுக்கு கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

இத்தகைய பணியை அம்பலக்காரர்கள், அல்லது நாட்டாண்மை, கர்ணம், நோட்டக்காரர், தண்டல்காரர், காவல்காரர், அளவன், வரியன், பொலிதள்ளி என்ற பலவகையான அலுவலர்கள்[2] நாடு முழுவதும் மேற்கொண்டனர். இந்தப் பண மிராசி (பரம்பரை) என்றும் இந்தப் பணிக்கான ஊதியம் பெறுவதற்காக விளைநிலங்களும் மான்யமாக கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் வசூல் செய்யப்படும் தீர்வை தானியத்தின் ஒரு பகுதியாக அளந்து கொடுக்கப்பட்டது. அதற்கு 'சுவந்திரம்' என பெயர் பெறும். இன்னும் அன்றைய முகவை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைப்போல நாளைய சந்ததிகளின் அறிவு வளர்ச்சிக்குத் திண்ணைப் பள்ளிகள் மட்டும் ஆங்காங்கு தமிழ்புலவர்களால் நடத்தப்பட்டு வந்தன. அப்பொழுது


  1. Rajaram Row, T., Ramnad Manual (1891),
  2. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 310