பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவள் என்னவானாள்?

123

‘பாலைவனம் போன்ற என் வாழ்க்கையில் தங்கள் கடிதங்கள் பசும் புற்றரைகளாகக் காட்சியளிக்கின்றன! என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

“தங்கள் கடிதத்தைக் கொண்டு வரும் தபாற்காரன் ஒரு நாளாவது என்னைத் தேடி வருவதில்லை; நானேதான் அவனைத் தேடிக் கொண்டு போகிறேன்” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

“எதையும் காலத்தோடு செய்வதுதான் நல்லது; காலங் கடந்து செய்வது நல்லதல்ல. முடிந்தால் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்; இல்லையேல் நாம் இருவரும் எங்கேயாவது ஒடிப் போவோம்” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

“உணர்விழந்தேன்; உற்சாகமிழந்தேன்; உங்கள் நினைவால் உணவு செல்லாமலும் உறக்கம் கொள்ளாமலும் தவியாய்த் தவிக்கிறேன்!” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

“ஒன்று, நீங்கள் வேண்டும்; நீங்கள்தான் வேண்டும். இல்லை, காலன் வேண்டும்; காலன்தான் வேண்டும்” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

என்னால் நம்பவே முடியவில்லையே!

***

“நான் கடிதம் எழுதக் கூடிய ஒரு நிலையிலிருந்து, மனமுமிருந்து, சந்தர்ப்பமும் வாய்த்தால் எழுதுவேன்.....” என்றால் என்ன அர்த்தம்?

“இல்லையென்றால் எழுதமாட்டேன்” என்றுதானே அர்த்தம்?

“நான் கடிதம் எழுதக்கூடிய ஒரு நிலையிலிருந்து.......”

இதென்ன வார்த்தை? கடிதம் எழுதக் கூடிய நிலையில் இல்லாமல் வேறு எந்த நிலையில் அவள் இருக்கிறாளாம்?

ஒரு வேளை வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறாளோ?

அப்படி நினைப்பதற்கும் அவள் இடம் கொடுத்திருக்கவில்லையே!