பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவள் என்னவானாள்?

125

இந்த விஷயத்தில் அவள் உலக வழக்கத்தையொட்டித் தன் பெற்றோரின் மீது பழியைச் சுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில், அவளே தன் வீட்டுக்குச் சர்வாதிகாரி

***

டடா! கடந்த காலத்தைப் பற்றி இப்பொழுது கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் எல்லாம் ஒரே வேடிக்கையாயிருக்கிறது. ஏன், விநோதமாய்க் கூட இருக்கிறது!

இதெல்லாம் வெளியே சொல்லக் கூடாதவை, பரம ரகசியமாக வைத்து கொள்ள வேண்டியவை யென்றாலும் இங்கே சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. “மனைவி கிழித்த கோட்டைத் தாண்டாமலிருப்பது கணவனின் கடமை” என்பது இப்போதெல்லாம் எங்கும் வழக்கமாயிருந்து வருகிறதல்லவா? அந்த வழக்கம் எல்லோருடைய விஷயத்திலும் கல்யாணமான பிறகுதான் ஏற்படுகிறது. நான் என்னடாவென்றால் கல்யாணமாகு முன்பே அவள் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை!

இதைப் பார்க்கும்போது, “காதல், பெண்களைப் பலசாலிகளாக்கி விடுகிறது; ஆண்களைப் பலவீனர்களாக்கி விடுகிறது!” என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறானே, அது எவ்வளவு தூரம் உண்மையாயிருக்கிறது!

ஆனாலும் அவன் சொன்னதை உலகம் கேட்டதா? இல்லை; முக்கியமாக, ஆணுலகம் அதை லட்சியம் செய்யவேயில்லை. அது தன் பாட்டுக்குக் காதல் நாடகத்தில் ஈடுபட்டுத் தன்னை எவ்வளவுக் கெவ்வளவு பலவீனப்படுத்திக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக் கவ்வளவு பலவீனப்படுத்திக் கொண்டு பாழாய்ப் போகிறது!

அதற்கேற்றாற் போல்தான் இந்தக் கவிஞர்கள், காவிய கர்த்தர்கள், கதாசிரியர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்களால் காதலிக்கப்பட்டுக் கைவிடப் பட்ட பெண்களுக்காகத்தான் கண்ணீர் வடிக்கிறார்களே தவிர, பெண்களால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட ஆண்களுக்காகக் கண்ணீர் வடிப்பதேயில்லை!

ஏன் இந்தப் பாரபட்சமோ?

***