பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

விந்தன் கதைகள்

ஜன்மத்திலா கிடைக்கப் போகிறது? அடுத்த ஜன்மத்தில் தானே!” என்ற தைரியம் அவருக்கு.

இந்தத் தைரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவருக்குக் கொஞ்சம் அச்சமும் இருக்கத்தான் இருந்தது. அதற்காக, அவர் சர்க்கார் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தோடு லஞ்சமாக, சுவாமிகளுக்கும் அவ்வப்போது கும்பாபிஷேகம் செய்து வைப்பது, லட்ச தீபம் ஏற்றி வைப்பது, திருவிழா நடத்துவது-இம்மாதிரி ஏதாவது, செய்து. அடியார்க்கு நல்லாராய், அன்புக்கும் ஆண்டவனுக்கும் அடிமையாய், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியாராய், சத்தியமே உருவாய் பராபரத்தின் அருளால் வாழ்ந்து வந்தார்.

இதனால்தானோ என்னவோ, சர்க்கார் அதிகாரிகளைப் போலவே சுவாமிகளும் அவரைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். அவருடைய திருத் தொந்தியைப் போலவே வியாபாரமும் நாளொரு மண்டியும் பொழுதொரு ஊருமாகப் பெருகி வந்தது. அதாவது, வெகு சீக்கிரத்திலேயே தமிழ்நாடு பூராவும் கிளைக் கடைகளை ஆரம்பித்து நடத்தினார். சொந்தத்திலேயே எண்ணெய் ஆலை ஒன்றும் வைத்தாகிவிட்டது. வருஷ வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டு வந்தது. ஸ்தாவர, ஜங்கம சொத்துக்காக வாங்கி வாங்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பணம் 'சரியாயிருக்கிறதா?’ என்று எண்ணிப் பார்த்துக் கொள்வதைத் தவிர அவர் வேறு ஒரு பாவமும் செய்து அறியார்

மணியின் தகப்பனாருக்குத் தம் எஜமானரின் மேல் கொள்ளை ஆசை. எசமான், "மாணிக்கம், மாணிக்கம்!ன்னு என் மேலே உசிரையே வச்சிருக்காரு!" என்று தம் மனைவியிடம் அவர் பெருமையுடன் சொல்லிக் கொள்வார். “சம்பளத்திலே ஒண்ணையும் காணோமே!” என்பாள் அவள், அலட்சியமாக.

“சீ. போடி பணமா பெரிது. மனிசன் அன்பு இல்லே பெரிசு" என்பார் மாணிக்கம் பிள்ளை.

ஆமாம், அவருக்கு எப்போதுமே தம் உரிமையைவிடக் கடமை பெரிது. இல்லையென்றால் கேவலம் முப்பது வருடத்திற்குள் ஒண்ணே கால் டஜன் ரூபாய்களைச் சம்பளமாகப் பெறுவதென்பது அவ்வளவு லேசான காரியமா?