பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைமேல் பலன்

"கொக்கரக்கோ" என்று கோழி கூவிற்று. சின்னப்பன் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன், தன் மனைவியை ஒரு முறை பரிதாபத்துடன் பார்த்தான். அவள் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய நெற்றியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

இன்னொரு முறை கோழி கூவிற்று.

அவன் மீண்டும் ஒரு முறை தன் மனைவியைப் பார்த்தான். பார்த்துவிட்டு, “நாளெல்லாம் நாய் மாதிரி உழைச்சுப்பிட்டு வருகிறாள், பாவம்! உடம்பெல்லாம் ஒரே அசதியாயிருக்காதா? எப்படி இம்புட்டுச் சீக்கிரத்தில் எழுந்திருக்க முடியும்?" என்று தனக்குத் தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டான்.

மீண்டும் கோழி கூவிற்று. சின்னப்பன் தன் மனைவியை லேசாகத்தீண்டி, "செல்லம், செல்லம்" என்றான்.

செல்லம் திடுக்கிட்டு எழுந்து, "என்ன, பொழுதா விடிந்துவிட்டது?" என்றாள்.

"இல்லை, இப்பத்தான் கோழி கூவிற்று" என்றான் சின்னப்பன்.

செல்லம் எழுந்து பல்லைத் துலக்கி முகத்தை அலம்பிக் கொண்டாள். குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு, "நீங்கள் வீட்டிலே தானே இருக்கப் போங்க?" என்று கேட்டாள்.

"ரொம்ப நல்லாயிருக்கு பொம்மனாட்டி வேலைக்குப் போறது; புருசன் வீட்டிலே குந்திக்கிட்டுக் கொட்டாவி விடறதா, என்ன? அந்தப் பாழாய்ப்போன ‘மாட்ச் பாக்டரி"க்காரன் மனசு எப்போ இளகப் போகுதோ, நாங்க எப்போ வேலைக்குப் போகப் போறோமோ? அதுவரை எங்கேயாச்சம் கூலி வேலை, கீலி வேலை இருக்கான்னு பார்க்கவேணுமில்லே?”

"அப்படின்னா போறப்போ தட்டியை இழுத்துச் சாத்தி நல்லாக்கட்டிட்டுப் போறிங்களா?”

"போறேன்."