பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

விந்தன் கதைகள்

அது இது தான்: பெருமைக்கு ஆசைப்படாத மனிதன் யார்? ஒருவனும் கிடையாது. அதற்கு வேலப்பன் மட்டும் விதி விலக்கா, என்ன? அவன், "முதலாளி, இவ்வளவு பெரிய மனிதரானதற்கு நான்தான் காரணம்" என்று தன்னுடன் வேலை செய்பவர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொள்வது வழக்கம். இது மாதவராயரின்காதுக்கு அடிக்கடி எட்டிக் கொண்டிருந்தது. அவன் அப்படிச் சொல்லிக் கொள்வது அவருடைய சுயமரியாதைக்குப் பங்கம் விளைப்பதாயிருந்தது. ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதெல்லாம் தெரியாத அப்பாவி வேலப்பன் தன்னை மேலதிகாரி வேலையிலிருந்து நீக்கியதைப் பற்றிப் புகார் செய்ய முதலாளியை நெருங்கினான்.

"என்னடா?" என்றார் அவர் கம்பீரமாக. வேலப்பன் விஷயத்தைச் சொன்னான் தாழ்மையாக.

"மேலதிகாரி சொன்னால் சொன்னது தான்!" என்றார் மாதவராயன்.

வேலப்பன் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. "இதற்குத்தானா நான் செய்துகிட்டிருந்த வேலையைக் கூடக் கெடுத்தீங்க!" என்றான் மனம் நொந்து.

அவ்வளவுதான்; மேஜை மேலிருந்த மணி ‘டங்’ என்று ஒலித்தது.

வாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்த கூர்க்கா ஓடோடியும் வந்தான்.

அடுத்த நிமிஷத்தில் வேலப்பன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டான்!

அதே சமயத்தில் அருகிலிருந்த ஒடக் கரையிலிருந்து அமரகவி பாரதியாரின் அருட் கவிதை காற்றில் மிதந்து வந்து அவன் காதில் கணிரென்று ஒலித்தது.

விழலுக்கு நீர் பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும்
வீணருக் குழைத் துடலும்
ஒய மாட்டோம்!"