பிராமணர்களைப் பற்றி யார் என்ன எழுதினாலும் அதைப் பற்றிச் சாதாரணமாக ஆட்சேபம் ஏற்படுவதில்லை. அவர்களை என்னபாடு படுத்தி எப்படி வதைத்து எடுத்தாலும் கேள்வி முறையிராது. ஒரு பிராமண கதாபாத்திரத்தைத் தலை மொட்டை யடித்துக் கழுதை மேலேற்றி வைத்து ஊர்வலம் விட்டால், கதை படிப்பவர்களில் சிலர் அருவருப்படைவார்கள்; சிலர் சிரிப்பார்கள்; ஆனால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள்.
ஆனால், ஒரு செங்குந்தரையோ, ஒரு வன்னிய குலத்தாரையோ, ஒரு கவுண்டரையோ, ஒரு விசுவ குலத்தாரையோ, ஒரு ஹரிஜன சகோதரரையோ கதையில் பொல்லாதவனாகச் செய்திருந்தாலும், பரிகாசம் செய்திருந்தாலும் வந்தது மோசம்; அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் கதையைப் படிக்க நேர்ந்து விட்டால் ஆசிரியரோடு துவந்த யுத்தம் செய்ய வந்து விடுவார்கள்.
இதன் காரணமாக மற்ற சாதிகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள்கூடத் தத்தம் சமூகக் குடும்ப வாழ்க்கைகளைப் பற்றிக் கதை எழுதத் தயங்கிப் பிராமண தமிழில் பிராமணக் குடும்பங்களைப் பற்றிய கதைகளை எழுதினார்கள்.
அதெல்லாம் ஒரு காலம். அந்தக் காலம் போய் தமிழ் நாட்டு இலக்கிய உலகத்தில் சாதிப் பிரச்சனை ஒருவாறு தொலைந்தது. எந்தச் சாதியாரையும் பற்றிப் பயமில்லாமல் கதை எழுதலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் நவயுக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷியக் கதைகளையும், மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள்.
மிராசுதார்களையும், தாசில்தார்களையும், ஐ.சி.எஸ் காரர்களையும், வக்கீல்மார்களையும் கைவிட்டுவிட்டு, ஏழைக் குடியானவனையும், ஆலைத் தொழிலாளியையும், ரிக்ஷா வண்டிக்காரனையும், சுமைகூலிக்காரனையும் பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள். ஆனால், எவ்வளவுதான் அநுதாபத்துடனும் இலக்கியப் பண்புடனும் எழுதினாலும் அந்தக் கதைகள் கதை என்ற முறையில் நன்றாயிருக்குமே தவிர, அவற்றின் உண்மை ஒளி தோன்றுவதில்லை.
பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக்கொண்டு