பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

விந்தன் கதைகள்

இருக்கட்டும் - இப்படி நினைத்துக்கொண்டே மேலே நடந்தான் முத்து.

அதுவரை 'பசி, பசி' என்று முனகிக்கொண்டிருந்த அவன் வயிறு, இப்போது 'பசி! ஐயோ, பசி' என்று அலறவே ஆரம்பித்துவிட்டது.

அகில உலகையும் ஆண்டவன் ஆட்டி வைக்கிறானாம்-பொய்; சுத்தப் பொய்! பசி அல்லவா அகில உலகையும் ஆட்டி வைக்கிறது? - இதற்கு எதை நான் இப்போது 'புசி!' என்று கொடுப்பது?

வேலை கிடைப்பதற்கு முன்னால் அவளையும் பார்ப்பதற்கில்லை; பார்த்தால் சீறுவாள்! - திருடுவது அவ்வளவு பெரிய குற்றமாகப் படுகிறது அவளுக்கு! - பாவம், உலகத்திலுள்ள ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு விதத்தில் திருடத்தான் திருடுகிறான் என்பது அவளுக்குத் தெரியுமா, என்ன?

போகட்டும்; என்னைப் போன்றவர்களைத் தவிக்க விடுவதற்கென்றே எல்லாவற்றையும் தனி உடைமையாக்கிக் கொண்டு விட்ட மனிதன், தண்ணீரையாவது இன்றுவரை பொதுவுடைமையாக விட்டு வைத்திருக்கிறானே - அதுகூடவா உதவாமல் போய்விடும் தன் பசிக்கு?

சுற்றுமுற்றும் பார்த்தான் முத்து; சற்றுத் தூரத்திலிருந்த தெருக்குழாய் ஒன்று 'வா அப்பனே, வா!' என்று அவனை அன்புடன் அழைப்பது போலிருந்தது - சென்றான்; திறந்தான்; குடித்தான்; நடந்தான்!

"ஏண்டாப்பா, இந்த அரிசி மூட்டையைக் கொஞ்சம் தூக்கிண்டு வர்றியா?"

பலசரக்குக் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பாட்டியின் வேண்டுகோள் இது; அந்த வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு விட்டான் முத்து.

இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள்; வீடு வந்து சேர்ந்ததும், "மகாராஜனாயிருப்பே! போய் வா; கோடி புண்ணியம் உனக்கு!" என்று அவனை வாயாற, மனமாற ஆசீர்வதித்து அனுப்பப் பார்த்தாள் பாட்டி.

"ஐயோ எனக்கு ஆசீர்வாதம் வேண்டாம் பாட்டி, கூலி ஏதாச்சும் கொடு!" என்று அலறினான் முத்து.