பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

விந்தன் கதைகள்

புத்தாடைக்கு இரண்டு சபாஷ்களல்லவா போடவேண்டும் போலிருக்கிறது?-சபாஷ், சபாஷ்!

என்ன, சபாஷ் போட முடியவில்லையா உங்களால்?-எப்படி முடியும், அவனைப் போன்ற எத்தனையோ நடமாடும் பிணங்களை மறந்து, நீங்கள் மட்டும் அண்டர்வேர், அதற்குமேல் வேட்டி அல்லது பேண்ட், அதற்கும் மேலே பனியன், சட்டை, கோட்டு அல்லது அங்கவஸ்திரம் எல்லாம் அணிந்து, 'நடமாடும் ஜவுளிக்கடை' களாகவே காட்சியளிக்கும் போது?

ஆனால் ஒன்று-மனிதனை மனிதன் சுலபமாக ஏமாற்றி விடலாம்; மனத்தை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடிகிறதா?

கிடக்கிறது, விடுங்கள்!-அப்படியொன்று இருப்பதையே அதுதானே இப்பொழுதெல்லாம் நமக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டி யிருக்கிறது?-இல்லாவிட்டால் 'நாட்டுப் பிரஜை'களாகவா இருப்போம் நாம் ? என்றோ 'காட்டுப் பிரஜை’களாகி விட்டிருப்போமே?

"ம், அவரவர்கள் செய்த புண்ணியம் அது!" என்று ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறீர்களா?-விடுங்கள்!-அதுதான் வழி; மனத்தை ஏமாற்ற அதுதான் வழி!

அந்த வழியையே அடியேனும் பின்பற்றி மனத்தை ஏமாற்றிவிட்டு, அவனைக் கவனித்தேன்; அவனுக்கு வேண்டியதும் அப்போது பட்டாசாய்த் தான் இருந்தது. எனவே, குப்பைக்குக் குப்பை நின்று அதைத் தேடிக்கொண்டே வந்த அவன் இவனைக் கண்டதும், “ஏண்டா, பொறுக்கி இந்தத் தெருவுக்குள்ளே நீ யாரைக் கேட்டு நொழைஞ்சே? யாரைக் கேட்டு நொழைஞ்சேடா?" என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக அதட்டிக் கேட்டான், தனக்கு ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில்-தானும் ஒரு 'பொறுக்கி’ என்பதை அடியோடு மறந்து!

பதில் இல்லை.

"சொல்லுடர், சோமாறி,"

அதற்கும் பதில் இல்லை.

"ஒரு வருசம், ரெண்டு வருசம் இல்லேடா, ஏழு வருசமா 'இந்தத் தெருவேதான், தானே இந்தத் தெரு'ன்னு இருந்துகிட்டு இருக்கிறவரு