பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருந்திய திருமணம்

521

மட்டும் நம்பலாமா? பகுத்தறிவுக்குப் பாதகமாச்சே! ஏன் இந்த வார்த்தைப் புரட்சி? இதனால் ஏற்படுமா வாழ்க்கைப் புரட்சி?”

"சிக்கலான கேள்வி, சிந்திக்க வேண்டிய கேள்வி; சிந்தித்தாலும் என் சிற்றறிவுக்கு விடை கிடைக்காத கேள்வி; வருகிறேன் அப்பா வருகிறேன்!”

சிகாமணி கிளம்பினான்.

"எங்கே போகிறாய் குழந்தை, எங்கே போகிறாய்?"

“பேரறிவு படைத்த பெருமகனாரின் உறைவிடத்துக்கு!"

"நன்றி, சென்று வருக!"

சிதம்பரம் திரும்பினார்.

அவர் திரும்பினாரோ இல்லையோ, “ரொம்ப அழகாய்த் தான் இருக்கிறது! அவன் ஏதோ தத்துப்பித்து என்று உளறுகிறான் என்பதற்காக நீங்களுமா அவனுடன் சேர்ந்து கொண்டு உளறுவது? கூப்பிடுங்கள், அவனை!" என்றாள் சிவகாமி.

"குழந்தாய், அன்னை உன்னை அழைக்கிறாள்!" என்றார் சிதம்பரம்.

சிகாமணி வந்தான் "தாயே தலை வணங்குகிறேன்!” என்றான்.

“என்னடா இது, நாடகத்திலே வேஷம் போடும் கூத்தாடிப் பயல்கள் மாதிரி? பிள்ளையா, லட்சணமாப் பேசேன்'

"வருந்துகின்றேன், அன்னையே வருந்துகின்றேன்; செந்தமிழின் சுவை அறியாச் சீற்றம் குறித்து வருந்துகின்றேன்!”

"வருந்தற்க மகனே வருந்தற்க!" என்று அவனைத் தேற்றினார் சிதம்பரம்.

"இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. முதலில் நீங்கள் போய் முகூர்த்தத்துக்கு நாள் பார்த்து வாருங்கள்"என்றாள் சிவகாமி.

"நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும்?"

"கோளோ, தேளோ, எனக்கு வேண்டியது நாள்!" என்றாள் சிவகாமி, அழுந்தந் திருத்தமா.

"அப்பா வெள்ளிப் பாத்திரமே, இந்தப் பித்தளைப் பாத்திரத்தைத் திருப்தி செய்வது எப்படி?”

"அதற்கும் எங்களிடம் திட்டம் இருக்கிறது; அந்தத் திட்டத்தின் மூலம் விதி நாளைக் குறித்தாலும் கோளைக் குறிக்கக் கூடாது என்பது தான்!”