பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவன் ஏன் திருடவில்லை?


'லொக்கு, லொக்கு, லொக்கு'.... நெஞ்சைப் பிளக்கும் இந்த இருமல் சத்தம் காதில் விழும்போதெல்லாம் அந்தச் சத்தத்துக்குரிய ஜீவனைக் கடை வாயிலில் உட்கார்ந்தபடியே அனுதாபத்தோடு பார்ப்பான் ஆறுமுகம். ஆம், அவனுடைய கடைக்கு எதிர்த்தாற் போலிருந்த நடைபாதையில் தான் அந்தக் கிழவன் வசித்து வந்தான். கடை என்றால் சாதாரணக் கடையல்ல, மிகப் பெரிய ஜவுளிக் கடை. அந்த மிகப் பெரிய கடையிலே ஏவலாளர்களாக வேலை பார்த்து வந்தவர்களில் மிகச் சிறியவனான ஆறுமுகமும் ஒருவன்.

காலையில் கடை திறப்பதற்கு முன்னால் அந்தக் கிழவனின் கையிலே ஒரு மூங்கில் பச்சைப்பசேலென்று காட்சி அளிக்கும். சிறிது நேரத்துக்கெல்லாம் அது அவன் கை பட்டுக் கூடைகளாகவும், முறங்களாகவும் மாறிவிடும். அதற்குப்பின் 'லொக்கு லொக்கு' என்ற இருமல் ஓசையோடு 'கூடை வாங்கலையோ, முறம் வாங்கலையோ!' என்ற ஓசையும் கலந்து கேட்கும்.

தெருவெல்லாம் அந்த ஓசைபரவி எதிரொலிப்பதை ஆறுமுகம் கேட்டுக் கொண்டே யிருப்பான். அதற்குள் மத்தியான வேளை வந்துவிடும்; அவன் சாப்பிடப் போய் விடுவான்.

சாயந்திரம் பார்த்தால் அந்தக் கிழவன் வேலை செய்த இடத்திலே கூடையும் இருக்காது; முறமும் இருக்காது. அவற்றுக்குப் பதிலாக புகையும் கல்லடுப்பின் மேல் கரி படிந்த கலம் ஒன்று கம்பீரமாக வீற்றிருக்கும்; அந்தக் கலத்தின் வாயிலிருந்து பொங்கிவரும் சோறு, அவனுடைய முகத்தையும் மகிழ்ச்சியால் பொங்கவைக்கும். அதை வடிக்காமலே எடுத்து வைத்துக்கொண்டு அவன் சாப்பிடுவதற்கும், ஆறுமுகம் வேலை பார்க்கும் கடையை மூடுவதற்கும் அநேகமாகச் சரியாயிருக்கும்.

இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? - எத்தனையோ நாட்களாக அவன் அந்தக் கிழவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் இல்லாத அந்தக் கிழவன் குளிரால் நடுங்கும் போது, தன்னுடைய சட்டையையாவது கழற்றி அவனிடம் கொடுத்து விடலாமா என்று தோன்றும் ஆறுமுகத்துக்கு. ஆனால் மிகச்சிறியவனான நான் எங்கே, மிகப் பெரியவனான அந்தக் கிழவர் எங்கே? - தன்னுடைய உள்ளம் அதற்கு இடம் கொடுத்தாலும், அவருடைய உடல் இடம் கொடுக்காது போலிருக்கிறதே!