பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூலி வேண்டுமா, கூலி?

619

சொல்லிக் கொண்டே எட்டணாவை எடுத்து அவனுக்கு முன்னால் விட்டெறிந்தான் அரசு.

"யாருக்கு வேணும், இந்த எட்டணா? டேசன் படிக்கட்டு மேலே இருக்கிற பொட்டியைத் தூக்கி டாக்ஸியிலே வெச்சா, ஐயாவுக்குக் கூலி எட்டணான்னு தெரியுமா, உனக்கு? தெரிஞ்சா, இம்முட்டுத் தூரம் இஸ்துகிட்டு வந்து நீ ஏன் எட்டணாவை எடுத்துக் குடுக்கப் போறே? மரியாதையா ஒரு ரூபாயைக் கீழே வையா!"

"வைக்கவில்லை யென்றால்?"

"கக்க வெச்சி வாங்குவேன்!"

இந்தச் சமயத்தில், "அவனோடு என்ன ஸார் பேச்சு, பேசாமல் 'அண்ட்ர'டுக்குப் போன் பண்ணுவதை விட்டுட்டு?" என்று சொல்லிக் கொண்டே 'டெலிபோன் டய'லில் கையை வைத்தார் ஓட்டல் முதலாளி.

அவ்வளவுதான்; கீழே கிடந்த, எட்டணாவை எடுத்துக் காதில் செருகிக் கொண்டு, "போனா பண்ணப் போறீங்க, போன்? நான் உங்களைப் பார்த்துக்கிற இடத்திலே பார்த்துக்கிறேன்!" என்று கருவிக்கொண்டே. நகர்ந்தான் பெருமாள்.

ன்று மாலை; ‘சென்னைக்கு வரவே வந்தோம், ஏதாவது ஒரு சினிமாவுக்கும்தான் போய் விட்டுப் போவோமே?' என்று நினைத்து, ஒரு சினிமா தியேட்டரை முற்றுகையிட்டான் அரசு. அங்கே முதல் இரண்டு வகுப்புகளுக்குரிய டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டு விட்டு இருந்ததால், மூன்றாம் வகுப்புக்குரிய டிக்கெட்டுக்காக நின்று கொண்டிருந்த நீண்ட கியூ'வில் தானும் ஒருவனாக நின்றான் அரசு.

ஆயிற்று; தனக்கு முன்னால் இருப்பவர்கள் இன்னும் எட்டே பேர்தான். ஒன்பதாவதாகத் தான்தான் வாங்க வேண்டும்........

கடைசி நிமிஷத்தில், 'டிக்கெட் இல்லை' என்று கையை விரித்துவிடுவானோ? எதற்கும் காசை எடுத்துக் கையில் வைத்துக்கொள்வோம்.........

இப்படி நினைத்ததும் சட்டைப் பைக்குள் கையை விட்டான், பர்ஸை எடுக்க! ஆனால், என்ன ஏமாற்றம்? காணவில்லை ; பர்ஸைக் காணவேயில்லை!