பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



376

விந்தன் கதைகள்

செய்தவர் மிஸ்டர் ஹரன். மூன்று குழந்தைகளில், இரண்டு முதல் மனைவியுடையவை. ஒன்று இரண்டாவது மனைவியுடையது; மூன்றாவது மனைவியான சுஜாதாவுக்கு இன்னும் புத்திரபாக்கியம் கிட்டவில்லை; அதற்காக அவள் அவரை நம்பியிருக்கவும் இல்லை.

வாழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது. மிஸ்டர் ஹரனுக்கு அது ஒரு கலையாகத் தோன்றியது. காரணம், கஷ்டத்தை பற்றியும் கவலையைப் பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தது தான்!

ஹரனின் பத்தாம் பாட்டனார் சத்தியம் என்றால் இன்னதென்றே தெரியாத ஓர் அப்பாவி, தம்மை லேவா தேவி செய்து வந்த நாலைந்து பண மூட்டைகளுக்கு ஶ்ரீமந்நாராயணனின் நாமத்தைப் பக்தி சிரத்தையுடன் போட்டு, வசதி மிக்க ஏழெட்டு விதவைகளின் கற்பைச் சூறையாடி, தமது பிற்காலச் சந்ததிகளுக்கு ஏராளமான வீடுவாசல்களையும், நிலபுலன்களையும் அவர் சேர்த்துவிட்டுப் போய் விட்டார். அதிலிருந்து வருஷம் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் வருமானம்வரவே, அவர்களுடைய குடும்பம் 'கலைக்குடும்ப'மாக மாறிவிட்டது. அத்தகைய குடும்பத்தின் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர் மிஸ்டர் ஹரன்; அவருடைய 1951-ம் வருடத்திய மாடல் மனைவி சுஜாதா. அந்த மாடலுக்கு ஏற்ப, அவள் மண்ணாசை, பொன்னாசையோடு ஆணாசையும் கொண்டிருந்தாள். ஆண்கள் பெண்ணாசை கொள்ளும் போது, பெண்களும் ஆணாசை கொள்ள வேண்டியதுதானே?

இந்த நிலையில் மூர்ச்சையான ஹரனைச் சுஜாதா கவனிக்க வில்லை; அவனுக்குப் பதிலாக ஜம்பு கொஞ்சம் தண்ணீரை கொண்டு வந்து அவருடைய முகத்தில் தெளித்து, விட்டு விசிறினான். டிரைவர் கன்னையா அது தான் சமயம் என்று, அவருக்கு எதிரே வந்து நின்று "எஜமான் எஜமான்!” என்று 'காக்கா' பிடித்துக் கொண்டிருந்தான்.

கோபம் வந்துவிட்டது எஜமானுக்கு-“ஏண்டா தடியன்களா! உங்களை யார் இங்கே வரச் சொன்னது?" என்று எரிந்து விழுந்தார்.

அவ்வளவுதான் ஜம்பு நழுவிவிட்டது; அசட்டுக் கன்னையா மட்டும் "எங்களைத் தவிர இங்கே வேறே யாரும் இல்லீங்களே!" என்று குழைந்த வண்ணம் அங்கே நின்றான்.

"ஏன், அம்மா எங்கே?" என்று திடுக்கிட்டுக் கேட்டார் அவர்.