பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரக்கம்

முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச்சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவலையே!" என்று சுற்றுமுற்றும் பார்த்தாள் சரளா.

“சரியாய்ப் போச்சி, அந்தப் பக்கம் இருக்கும் போதே அதைச் சொல்லியிருக்கக் கூடாதா? இந்தப் பக்கம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டுமா?" என்றான் முரளி அலுப்புடன்.

"இதுதான் நுண்ணிடைப் பெண் ஒருத்திக்காக நீங்கள் நூற்றிரண்டு மலைகளைச்சாடும் லட்சணமாக்கும்?"என்றாள் சரளா.

தனக்காகத்தன் இனத்தையே பழிக்கும் அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது. அவனுக்காக நூற்றிரண்டு மலைகளைச் சாடாவிட்டாலும் நூற்றிரண்டடி நீளமுள்ள சாலையையாவது சாடுவோம் என்று அவன் திரும்பினான். அப்போது அழுதுவடியும் ஆண்சிங்கத்தின் குரலொன்று கேட்கவே இருவரும் திரும்பிப் பார்த்தனர்; எதிர்த்தாற் போலிருந்த நீதி மன்றத்திற்கு எதிரே யாரோ ஒருவன் தலைவிரி கோலமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.

"பாவம் என்ன கஷ்டமோ" என்றாள் சரளா.

"எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், பிறர் கஷ்டத்துக்கு நாம் காரணமல்ல என்பது எங்கள் பேராசிரியர் வாக்கு" என்றான் முரளி.

"அவர் கிடக்கிறார்! அதற்காகக் கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக நாம் வாழ்வதா, என்ன? வாருங்கள், போய் என்னவென்று விசாரிப்போம்" என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.

"என்னய்யா, என்ன நடந்தது?"அவ்வளவுதான்; அவனுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை நான் எப்படி அம்மா, சொல்வேன்? எப்படி ஊருக்குத் திரும்பிப் போவேன்?" என்று அவன் கதறினான்.

வி.க. -27