பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



103

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



முக்கியமான இடம் என்பதை மறந்துவிட்டாயே! என்று நினைவுபடுத்திவிட்டு, தைரியம் ஊட்டிச் சென்றுவிட்டார்.

பிறகென்ன! சிறுவனின் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது. அன்று அந்த சிறுவன் எதிராளிகளின் இலக்கிற்குள் 10 முறை பந்தடித்து, தன் குழுவிற்கு வெற்றி தேடித் தந்துவிட்டான்.

இடம் பிடித்துக் கொண்ட அந்த சிறுவன், எல்லோருடைய இதயத்திலும் இடம்பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து அந்த சிறுவனின் ஆட்டத்தில் மறுமலர்ச்சி புகுந்து கொண்டது. அந்த சிறுவன்தான் தயான் சந்த் என்று அழைக்கப்படும் உலக மகாவீரன்.

வளைகோல் பந்தாட்டப் புலி (Hockey wizard) என்று உலகத்தாரால் செல்லமாக அழைத்துப் பாராட்டப் பெற்ற வீரன். சிப்பாயாக இராணுவத்தில் சேர்ந்த தயான் சந்த், விளையாட்டில் வளர்த்துக் கொண்ட திறமையால் மேஜராகப் பதவி உயர்த்தப் பெற்று கெளரவிக்கப்பட்ட மகாவீரன்.

தனக்குரிய இடம் எது என்று உணர்ந்து கொண்ட அந்த வீரன், கடைசி வரையிலும் கொண்டது விடாமல் கண்டதை விடாமல் கட்டிக் காப்பாற்றி, வளைகோல் பந்தாட்டத்தில் பெரும்சரித்திரம் படைத்த மகாவீரன் ஆவான்.

இடம் பிடிப்பது என்பது சுலபம்தான். ஆனால், இடத்தை விடாமல் அங்கேயே இருப்பது என்பது எல்லோராலும் முடியுமா! முடியாது. அதற்கு உள்ளத்தில் உறுதியும், உழைப்பில் திண்மையும், கண்ணும் கருத்தும் நிறைந்த கடமை உணர்வும், தெய்வமாகப் போற்றும் செயலாண்மையும் நிறையவே வேண்டும். அத்தனையும் நித்தமும் கொண்டிருந்ததால்தான், தயான் சந்த் இன்று புகழின் சிகரத்தில் வீற்றிருக்கின்றார்.