உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. போர்க்களத்தில்....

93

லாம் அம்புகள் தைத்திருப்பதனால் அவன் உடம்பு அம்புப் படுக்கைக்குமேல் பீஷ்மர் படுத்திருந்தது போலக் கிடக்கிறது. இப்படிக் கிடந்தனைப் பார்த்து, “உடம்பெல்லாம் முள்ளையுடைய முள்ளம்பன்றியைப்போலக் கிடக்கிறான்” என்றும், “கழற்சிக்காயைப்போல அல்லவா பூமியில் உடம்பு படாமல் கிடக்கிறான்?” என்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

தன் கணவன் போர்க்களத்தில் பகைவரைப் பொருது வீழ்ந்தான் என்பதை அறிந்து ஒரு வீரனுடைய மனைவி ஓடி வருகிறாள். வேறு சில பெண்களும் வருகிறார்கள். மார்பில் விழுப்புண் பட்டு வீரம் இலகும் நிலையில் கிடந்த தம் கணவர்களை அவர்கள் தழுவிக்கொள்கிறார்கள். “எம் கணவர், எம் கணவர்” என்று சொல்லிச் சொல்லித் தழுவுகிறார்கள். அதோ ஒருத்தி அழுகிறாள்; ஆனால் புலம்பவில்லை. அவளுக்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. மார்பிலே புண்பட்டுச் சுத்த வீரனாக உயிர் நீத்தான் என்பதை அறிந்து அந்த வீர மகளுக்கு உவகை உண்டாயிற்று. அவள் நிலையைக் கண்டு கூற்றுவனும், ‘நம்மிடம் இத்தனை வீரம் இல்லையே!’ என்று நாணுகிறானாம்.

“வெந்தொழிற் கூற்றமும் நாணின்று; வெங்களத்து
வந்த மறவர்கை வாள்துமிப்பப்-யைந்தொடி
ஆடரிமா அன்னான் கிடப்ப அகத்துவகை
ஓடரிக்கண் ணீராய் உக.”

[நீராய் உக, கூற்றமும் நாணியது. நாணின்று-நாணியது. மறவர்-வீரர். துமிப்ப-வெட்ட. பைக்தொடி-வளையை யுடையவள்; வீரன் மனைவி. ஆடு அரிமா அன்னான்-வெற்றி பெறும் சிங்கத்தைப் போன்றவன். ஓடு அரிக்கண்-ஒடுகின்ற அரியையுடைய கண். உவகை ரோய் உக்கது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/100&oldid=1848604" இலிருந்து மீள்விக்கப்பட்டது