134
வீரர் உலகம்
வெண்குடையையும் உடைய அரசனுக்குச் சிவந்த வாயினையும் பெரிய கண்ணினையும் உடைய மைந்தன் பிறந்தான்; அதனால் பெரிய புகழையுடைய தேவர்கள் மகிழ்ந்தனர்; பூவுலகில் உள்ளவர்கள் வாழ்த்தினார்கள்; பகைவர் தம் பகைமனப்பான்மையை விட்டுப் பணிந்தார்கள் என்று பொலிவு மங்கலம் பாடுகிறார்கள்.
“கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்
பெருங்கட் புதல்வன் பிறப்பப்-பெரும்பெயர்
விண்ணார் மகிழ்ந்தார்; வியலிடத்தார் ஏத்தினார்;
எண்ணார் அவிந்தார் இகல்.”
[கருங்கழல்-வலிமையான வீரக்கழல். பெரும் பெயர். பெரிய புகழ். வியலிடம்-பூமி. எண்ணார்-பகைவர். இகல்-பகை.]
அரசனுடைய பிறந்த நாளை வெள்ளணி நாள் என்று சொல்வார்கள். அன்று நாடு முழுவதும் பெரிய கொண்டாட்டம் நிகழ்கிறது. பரிசிலர்கள் பொன்னும் யானையும் ஆடையும் பெறுகிறார்கள். அரசன் நீடுழி வாழவேண்டுமென்று யாவரும் வாழ்த்துகிறார்கள். நல்லவர்கள் நல்லுரை கூறி வழிப்படுத்தவும், பரிசிலர் பரிசு பெற்றுப் புகழவும், குடிமக்கள் இன்பு வாழ்வு பெற்று ஏத்தவும், பகைவரும் பணிந்து ஏவல் செய்யவும் மனைவி மக்களோடு அரசன் பிறர் வாழ வகை பண்ணித் தானும் உலகம் போற்ற வாழ்கிறான்.