3. நாடு கொள்ளும் போர்
இப்போது உண்மையாகவே போர் தொடங்கி விட்டது. இதற்கு முன் ஆநிரையைப் பற்றிக்கொண்டு வந்தார்கள். இனிமேல்தான் முறையான போர் நிகழப் போகிறது. தன் பகைவருடைய நாட்டைக் கைப்பற்றி அடிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டான் அரசன். பழைய மரபுப்படி அவன் வஞ்சி மாலையை அணிந்து கொண்டான். இதனை அறிந்தவுடன் வீரர்களுக்கு உண்டான ஊக்கத்துக்கு அளவில்லை. அது போதாதென்று இன்னும் கிளர்ச்சி உண்டாக அவர்கள் வீர பானங்களை நுகர்ந்தனர்.
பட்டத்து யானையை அலங்காரம் செய்து கொண்டு வந்தார்கள். வீரர்கள் ஆரவாரம் செய்வதைப் பார்த்து அதற்கு உண்மை விளங்கிவிட்டது. போர் நிகழப் போகிறது என்பதை அது எப்படியோ உணர்ந்து கொண்டது. அதற்குக்கூட எழுச்சி உண்டாகிறது. அதுவும் முழங்குகிறது. மேகம்போல நிற்கும் அதன் குரல் இடிக்குரலைப் போல ஒலிக்கிறது. அதைக் கேட்டால் பகைவர் கிடுகிடாய்த்துப் போய்விட மாட்டார்களா?
இவ்வாறு நாடு கொள்ளக் கருதி அரசன் போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதை வஞ்சி என்ற புறத்திணையில் அடக்கிப் பாடுவர் புலவர்.
“எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.”