48
வீரர் உலகம்
இவன் போரென்னும் கடலைக் கடக்கத் தெப்பத்தைப் போல உதவுகிறவனாயிற்றே!" என்கிறார் ஒருவர். "வீரன் என்றால் சாமானிய வீரனா? எவ்வளவு உயர்ந்த பண்புடையவன்! உயர்ந்த பெரியவர்களுக்கு நடுவே இரும்புத் தூணைப்போலத் துளங்காமல் இருக்கும் விறல் வீரனாயிற்றே! இனி இவனை எங்கே காணப்போகிறோம்?" என்று புலம்புகிறார் மற்றொருவர். "இவன் தான் பிறந்த ஊருக்கே உயிர் போன்றவன்; ஊர் மட்டுமா? உலகுக்கே உயிர் போன்றவன் என்றே சொல்ல வேண்டும்" என்று வேறு ஒருவர் இரங்குகிறார். அவனுடைய அற இயல்பைச் சொல்லி வருந்துகிறார் ஒருவர்; "இவன் மார்பைத் திறந்த வேல், அறம் நிரம்பிய வாயில் ஒன்றை அடைத்து விட்டது. வீரத்தால் பெறும் பொருளையெல்லாம் வாரி வழங்கும் அறமுடையவன் இவன். அப்படி அறம் திறந்த வாயிலை, இவ்வண்ணலின் மார்பைத் திறந்த வேல் அடைத்துவிட்டதே!" என்பது அவர் புலம்பல்.
"போர்க்குப் புணைமன்; புரையோர்க்குத் தாணுமன்;
ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்மன்;-யார்க்கும்
அறம்திறந்த வாயில் அடைத்ததால், அண்ணல்
நிறம்திறந்த நீள்இலை வேல்."[1]
[புணை - தெப்பம். மன்: இப்போது போய்விட்டானே என்ற இரக்கத்தைக் குறிப்பித்தது. புரையோர்-உயர்ந்தோர். தாணு - தூண். நிறம் - மார்பு.]
- ↑ 1. பு. வெ.80.