7. மதில் முற்றுகை
61
மதிலின்மேல் பல வகை ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். எதிரிகளின்மேல் வீசி அவர்களை அழிக்க அவை உதவும். படைக்கலங்களை எறியும் வீரர்கள் அங்கங்கே மறைவில் நின்று போரிடுவார்கள்: அம்பு முதலியவற்றை மறைவாக வைத்திருக்கும் துவாரங்களும் மறைவிடங்களும் மதிலின்மேல் இருக்கும். ஏணி வைத்து ஏறாத வகையில் பலவகையான பாதுகாப்புகளை மதிலில் அமைத்திருப்பார்கள். மதில்மேல் மறைவாக நின்று அம்பை எய்யும் இடத்துக்கு ஏப்புழை என்று பெயர். வளைவு வளைவாக மதிலின்மேல் இருக்கும் உறுப்புக்களை ஞாயில் என்று சொல்வார்கள். மதிலுக்குள்ளே வீரர்கள் மறைவாக நிற்பதற்கு மேடைகள் உண்டு. அவற்றைப் பதணம் என்று சொல்லுவார்கள்.
மதிலைச் சுற்றியுள்ள அகழியைக் கடக்கப் பலகையினால் பாலம் அமைத்திருப்பார்கள். போர்க்காலங்களில் அவற்றைத் தூக்கிவிடுவார்கள். மதிற்கதவுகள் மிகவும் உறுதியானவை. உள்ளே பெரிய பெரிய மரவிட்டங்களைக் கதவுக்குப்பின் பலமாக அமைத்திருப்பார்கள். யானைகளைக் கொண்டு மதிற்கதவுகளை இடித்து மோதுவார்கள். அவை தம்முடைய கொம்புகளால் கதவுகளை மோதும்.
அகழிக்கு அப்பால் காடுகளை வளர்த்திருப்பார்கள். அவற்றை மிளை என்றும் குறுங்காடு என்றும் சொல்வார்கள். அதுவே காட்டரண். மதிலை முற்றுகையிட்டுப் போர் செய்து வெல்வது என்பது மிகவும் அரிய செயல். மதிலுக்குள் இருப்பவன் மிகவும் பாதுகாப்பாக இருப்பவனாதலின் அவனை எளிதிலே தோல்வியுறச் செய்ய முடியாது. வெளியிலிருந்து உணவுப் பண்டங்கள் போகாதபடி பல காட்கள் புறத்தே தங்கி முற்றுகையிட வேண்டி வரும்.