பக்கம்:வெங்கலச் சிலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

39


ஜெகமஞ்சப் போரிட்ட ஜூலியஸ் சீசர் ஆண்ட ரோம் ஏகாதிபத்தியம், அகிலத்தைத் தன் இரும்புக் காலால் மிதித்த ஹிட்லரின் சர்வாதிகாரம், உலகின் இரண்டு பாகத்தை ஆண்ட பெர்ஷிய சாம்ராஜ்யம், நானிலம் என்றும் கண்டிராத தன் வாள் வீச்சால் கதிரவன் ஒளியையும் மங்கவைத்த வீர நெப்போலியனின் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அரசியல் வானில் மங்காத புகழோடு வாழ்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், செங்கோடிட்ட சீனக் குடியரசு, எரிமலையின் வாயிலே விளையாடும் ஜப்பான் ஆகிய அவ்வளவு நாடுகளும் தலைவணங்கும் ஒப்பற்ற மனிதாபிமானியை ஒவ்வொருவருடைய உள்ளத்திலே மாத்திரமின்றி, வெங்கலச் சிலையுருவில் விளாடிவாஸ்டாக் நகரமும், உண்மையான உருவத்தை மாஸ்கோவும் காப்பாற்றி வருகின்றது.

மாஸ்கோ மக்களின் உணர்ச்சி குன்றி ஊக்கம் தளருகிறபோது, ஏழைக்கு வாழ்வளித்த இந்த இதயப் பெருஞ்சுடரைக் கண்டு கண்ணீர் சிந்தாதார் இல்லை.

ஆவேச உணர்ச்சிகொண்டு அலைகடலே எழும் பினும், அதை அடக்கியாளும் ஆற்றல் மாஸ்கோ மக்களுக்கு உண்டு என்பதை அகில ஐரோப்பாவுக்கு அறிவுறுத்துவதைப் போலத் தன் இடக்கரத்தால் எச்சரிக்கை செய்கின்றான் அப்பெருந்தகை. வாழ்க அவன் நாமம்! வற்றாத ஜீவநதி போல் வளர்க அவன் கொள்கை! விடிந்துவரும் கதிரவன் கைகளால் தெளிவுபெறட்டும் அந்த வெங்கலச்சிலை.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/39&oldid=1315779" இலிருந்து மீள்விக்கப்பட்டது