பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 26


மிகுதியான இரைச்சலை உண்டு பண்ணுகின்றது. திட்பமிக்க வெடிமருந்தே குண்டைக் குறிவைத்த இடத்திற்குச் செலுத்துகின்றது.

மனிதன் தன் ஆற்றல்களைப் பேணிக் காத்துத் தன் குறிக்கோள் நிறைவேற்றுதற்காக அவற்றை ஒருமுகப்படுத்திப் பலப்படுதுகின்ற அளவிற்கு அவன் ஆறுதலும், அமைதியும், ஓய்வும், பெறுகின்றான். கூச்சலைச் சக்தியென்று பொருள் கொள்வது பெரும் மயக்கமாகும். அதட்டி வெருட்டும் புகழேங்கியான பெரிய குழந்தையை யாருமே இயக்க வியலாது. உடலைப் பொறுத்த அளவிலேயே அவன் மனிதன்; ஆனால், மனத்தைப் பொறுத்த அளவில் அவன் ஒரு கைக் குழந்தையேயாகும்; எதையும் செய்ய வலிமையில்லாத நிலையிலும், பிறர்க்குக் காட்ட வேலைப்பாடு இல்லாத நிலையிலும், தான் சாதித்தது என்ன, தான் சாதிக்கக் கூடியது என்ன என்பதை இரைந்து பறைசாற்றுவதன் மூலம் அதை ஈடுசெய்ய முற்படுகின்றான்.

“அசைவற்ற நீர்த்தேக்கம் ஆழமாகவே இருக்கின்றது”; பெரும் உலகின் ஆற்றல் செவிப் புலனாகாதவையாகவே இருக்கின்றன. அமைதி எங்குளதோ அங்கே மிகப் பெரிய ஆற்றலுமுள்ளது. வலிமையான, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆறுதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட மனத்தின் திண்ணமான குறியீடு அமைதியேயாகும். அமைதியான மனிதனுக்கு அவனுடைய தொழில் முறை தெரியும் என உறுதியாக நம்பலாம். அவன் பேசுகின்ற சொற்கள் சிலவே, ஆயினும் அவை பல கூறும். அவனுடைய வழிவகைகள் நன்கு திட்டஞ்செய்யப்பட்டவை;